Last Updated : 28 Mar, 2021 01:22 PM

3  

Published : 28 Mar 2021 01:22 PM
Last Updated : 28 Mar 2021 01:22 PM

வேளாண் துறையில் நவீனமயமாக்கல் அவசியம்; கோவை பேருந்து நடத்துநருக்குப் பாராட்டு: 75-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தல்

பிரதமர் மோடி : கோப்புப்படம்

புதுடெல்லி

நாட்டின் வேளாண்துறையில் நவீனமயமாக்கல் இந்த நேரத்துக்கு மிகவும் அவசியமானது. ஏற்கெனவே தாமதமாகிவிட்டது. ஏராளமான காலத்தை நாம் இழந்துவிட்டோம் என்று 75-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

ஒவ்வொரு மாதத்திலும் கடைசி ஞாயிற்றுக்கிழமையன்று, வானொலியில் 'மன் கி பாத்' என்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசி வருகிறார். அந்த வகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று 75-வது 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது

''மார்ச் 28-ம் தேதியுடன் 'மன் கி பாத்' நிகழ்ச்சி 75-வது மாதத்தை நிறைவு செய்கிறது. 2014-ம் ஆண்டு இந்த நிகழ்ச்சியைத் தொடங்கினேன். நேற்றுதான் தொடங்கியதைப் போல் இருந்தது. ஆனால், 75-வது மாதங்கள் ஓடிவிட்டன. இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு அளித்துக் கேட்ட மக்களுக்கும், கருத்துகளைப் பகிர்ந்த கொண்ட மக்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன். இந்தப் பயணத்தில் நாம் ஏராளமான விஷயங்களைப் பற்றிப் பேசி இருக்கிறோம். ஆய்வு செய்திருக்கிறோம், கற்றுக் கொண்டிருக்கிறோம்.

கடந்த ஆண்டு மார்ச் மாதம்தான் கரோனா வைரஸுக்கு ஜனதா ஊரடங்கு கொண்டுவரப்பட்டது. மக்கள் அனைவரும் ஜனதா ஊரடங்கை மதித்து மிகவும் கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டார்கள். கரோனாவுக்கு எதிராக விரைவாகப் போராடத் தொடங்கினார்கள்.

நாட்டின் வேளாண்துறையில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்த வேண்டிய அவசியமான காலகட்டத்தில் இருக்கிறோம். ஏற்கெனவே நாம் காலத்தை இழந்துவிட்டோம். இன்னும் தாமதம் செய்யக்கூடாது. வாழ்க்கையின் ஒவ்வொரு காலகட்டத்திலும் நவீனத்துவம், புத்தாக்கம் என்பது அவசியமானது.

வேளாண் துறையில் பாரம்பரிய முறைகளோடு இணைந்து, புதுமைகளையும், நவீனத்துவத்தைப் புகுத்துவதன் மூலம், புதிய வேலைவாய்ப்பை இளைஞர்களுக்கு உருவாக்க முடியும். விவசாயிகளின் வருமானத்தையும் பெருக்க முடியும். இந்த தேசம் ஏற்கெனவே வெண்மைப் (பால்) புரட்சியைச் சந்தித்துவிட்டது. அடுத்ததாக மாற்றாகத் தேனீக்கள் வளர்ப்பில் மாற்றாக உருவாக வேண்டும்.

கோவை பேரு்து நடத்துநர் யோகநாதன்

வேளாண் துறையைச் சீர்படுத்துவதற்காக மத்திய அரசு கொண்டு வந்துள்ள சீர்திருத்தங்கள், வேளாண் சட்டங்கள் நிச்சயம் விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும், முதலீட்டைக் கொண்டுவரும், நவீனத் தொழில்நுட்பங்களைப் புகுத்தும். நாடு முழுவதும் எங்கு வேண்டுமானாலும் தங்களின் விளைபொருட்களைச் சிறந்த விலையில் விற்பனை செய்ய முடியும்.

கரோனா வைரஸுக்கு எதிராகத் தடுப்பு மருந்து கண்டுபிடிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், நாம் தடுப்பு மருந்தை இந்த ஆண்டு மக்களுக்குச் செலுத்தி வருகிறோம். மிகப்பெரிய அளவில் தடுப்பூசி முகாம் இந்தியாவில் செயல்படுத்தப்பட்டு வருவது பெருமைக்குரிய விஷயமாகும்.

விளையாட்டுத் துறையில் பெண்களின் பங்கு பாராட்டுக்குரியதாக இருக்கிறது. கிரிக்கெட்டில் மிதாலி ராஜ் 10 ஆயிரம் ரன்களை அடித்து சாதனை புரிந்துள்ளார். பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் சிறப்பாகச் செயல்படுகிறார்கள்.

கோவையைச் சேர்ந்த பேருந்து நடத்துநர் மாரிமுத்து யோகநாதன் டிக்கெட் வழங்கும்போது பயணிகளுக்கு இலவசமாக மரக்கன்றுகளை வழங்கி வருகிறார். இதற்காக தனது ஊதியத்தில் பெரும்பகுதியைச் செலவிடுகிறார். அவரின் முயற்சிகளை நான் பாராட்டுகிறேன்.

அடுத்த மாதத்தில் உகாதி, தமிழ்ப் புத்தாண்டு, கூடிபத்வா, பிஹு, போய்லா போய்ஷ்க் என வெவ்வேறு பெயர்களில் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. கேரளாவில் விஷூ பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகை காலத்தில் மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன்''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x