Published : 28 Mar 2021 09:34 AM
Last Updated : 28 Mar 2021 09:34 AM
கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக ஐந்து முனை திட்டம் ஒன்றை மத்திய அரசு வகுத்துள்ளது.
கோவிட்-19 பாதிப்புகளின் அதிகரிப்பை தொடர்ந்து 12 மாநிலங்களுடன் உயர்மட்ட கூட்டத்தை மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் நடத்தினார். இம்மாநிலங்களின் கூடுதல் தலைமை செயலாளர்கள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர்கள், அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 46 மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் நகராட்சி ஆணையர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர். தி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி கே பாலும் இதில் கலந்து கொண்டார்.
மகாராஷ்டிரா, குஜராத், ஹரியாணா, தமிழ்நாடு, சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், டெல்லி, ஜம்மு & காஷ்மீர், கர்நாடகா, பஞ்சாப் மற்றும் பிஹார் ஆகியவை கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்கள் ஆகும்.
இம்மாதத்தில் நாடு முழுவதும் பதிவான 71 சதவீத தொற்றுகள் மற்றும் 69 சதவீத உயிரிழப்புகள் 46 மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. கோவிட் தொற்றை கட்டுப்படுத்துவதற்காக கூட்டத்தின் போது ஐந்து முனை யுக்தி ஒன்று வகுக்கப்பட்டது.
அதன் விவரம்:
1) பரிசோதனைகளை மிக அதிகளவில் நடத்துதல்
2) பாதிக்கப்பட்டவர்களை உடனுக்குடன் தனிமைப்படுத்தி அவர்களின் தொடர்புகளை கண்டறிதல்
3) பொது மற்றும் தனியார் சுகாதார வளாகங்களை மீண்டும் தயார்நிலையில் வைத்தல்
4) சரியான கோவிட் நடத்தை விதிமுறையை உறுதி செய்தல்
5) அதிகளவில் பாதிப்புகள் பதிவாகி வரும் மாவட்டங்களில் தடுப்பு மருந்து வழங்குவதற்கான இலக்கு சார்ந்த அணுகுமுறை
ஆகியவையே இந்த ஐந்து முனை யுக்தி ஆகும். இதனை தீவிரமாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT