Published : 27 Mar 2021 05:58 PM
Last Updated : 27 Mar 2021 05:58 PM
நந்திகிராமில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அங்குள்ள பாஜக தலைவரிடம் மீண்டும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கே வந்துவிடுங்கள் என்று முதல்வர் மம்தா பானர்ஜி பேசும் ஆடியோ ஒன்றை பாஜகவினர் வெளியிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் 30 தொகுதிகளுக்கும் இன்று முதல்கட்டத் தேர்தல் நடக்கும் நிலையில், பாஜகவினர் இந்த ஆடியோவை வெளியிட்டுத் தேர்தல் ஆணையத்திடம் புகாரும் அளித்துள்ளனர்.
திரிணமூல் காங்கிரஸில் இணைந்து அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி அந்தக் கட்சியிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார். நந்திகிராமில் சுவேந்து அதிகாரியை எதிர்த்துதான் முதல்வர் மம்தா பானர்ஜி இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
இந்நிலையில், பாஜக தேசிய பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா தலைமையிலான பாஜகவினர் இன்று மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியை இன்று சந்தித்தனர். அப்போது, திரிணமூல் காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்துள்ள ப்ரோலாய் பால் என்பவரை மீண்டும் தனது கட்சிக்கு வருமாறு மம்தா பானர்ஜி பேசியதாகக் கூறப்படும் ஆடியோவை வெளியிட்டு விசாரணை நடத்துமாறு கோரினர்.
ப்ரோலாய் பால் தற்போது நந்திகிராம் மாவட்ட பாஜக துணைத் தலைவராக இருந்து வருகிறார். சுவேந்து அதிகாரியுடன் நெருக்கமாக இருந்து வரும் ப்ரோலாய் பாலிடம் , மம்தா பானர்ஜி தனிப்பட்ட முறையில் பேசி நந்திகிராம் தொகுதியில் வெற்றி பெறுவதற்கு உதவுமாறு கோரியதாகக் கூறப்படுகிறது.
மம்தா பானர்ஜி பேசுவதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில், "நந்திகிராம் தொகுதியில் நாங்கள் வெல்வதற்கு நீங்கள் (ப்ரோலாய்) கண்டிப்பாக உதவ வேண்டும். உங்களுக்கு சில மனக்குறைகள் இருந்தது எனக்குத் தெரியும். ஆனால், அனைத்தும் சுவேந்து அதிகாரியால் வந்த பிரச்சினைதான். நந்திகிராம் தொகுதிக்குள் என்னை அவர் அனுமதிக்கவே இல்லை. நான் அனைத்தையும் கவனித்துக் கொள்கிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
அதற்கு ப்ரோலாய் பால் பதில் அளிக்கையில், "தீதி (சகோதரி) நீங்கள் என்னை அழைத்தது எனக்குப் பெருமையாக இருக்கிறது. ஆனால், நான் அதிகாரிக்கு துரோகம் செய்ய முடியாது. எனக்கு ஆதரவாக அவர்கள் நிற்கிறார்கள்" என மறுப்பது போல் ஆடியோவில் உள்ளது.
ஆனால், அந்த ஆடியோவின் உண்மைத் தன்மை குறித்து இதுவரை பிடிஐ செய்தி நிறுவனம் ஆய்வு செய்யவில்லை.
இந்த ஆடியோ குறித்து ப்ரோலாய் பால் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், " நான் தற்போது பாஜகவில் இருக்கிறேன், அவர்களுக்காக உழைக்கிறேன். அவர்களுக்கு துரோகம் செய்ய முடியாது. மம்தா பானர்ஜி என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்புகொண்டு மீண்டும் கட்சிக்குத் திரும்புங்கள் எனக் கேட்டுக் கொண்டார்" எனத் தெரிவித்தார்.
திரிணிமூல் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் குணால் கோஷ் கூறுகையில் "முதலில் பாஜக வெளியிட்ட ஆடியோ கிளிப்பின் உண்மைத் தன்மை யாருக்கும் தெரியாது. அது உண்மையா அல்லது பொய்யா என்பதும் தெரியாது. ஆனால், ஒரு அரசியல் தலைவர், தனது கட்சியிலிருந்து விலகிச் சென்ற ஒருவரை மீண்டும் வருமாறு அழைப்பதில் தவறில்லை என நினைக்கிறேன். அரசியலில் இது இயல்பான ஒன்று" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT