Published : 27 Mar 2021 04:28 PM
Last Updated : 27 Mar 2021 04:28 PM
சீரம் மருந்து நிறுவனத்தின் சார்பில் கரோனா வைரஸுக்கு எதிராக ஏற்கெனவே கோவிஷீல்ட் தடுப்பூசி பயன்பாட்டில் இருக்கும் நிலையில், 2-வதாக ஒரு தடுப்பூசியின் பரிசோதனை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆதார் பூனாவல்லா தெரிவித்துள்ளார்.
சீரம் மருந்து நிறுவனத்தின் சார்பில் அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து "கோவோவேக்ஸ்" கரோனா தடுப்பு மருந்து பரிசோதனை இந்தியாவில் தொடங்கியுள்ளது.
வரும் ஜூன் மாதத்துக்குள் கோவோவேக்ஸ் கரோனா தடுப்பூசி அறிமுகமாகும் என்று ஆதார் பூனாவல்லா முன்பு தெரிவித்தார். இந்நிலையில், செப்டம்பர் மாதம் கோவோவேக்ஸ் தடுப்பூசி அறிமுகமாகும் எனத் தெரிவித்துள்ளார்.
கோவோவேக்ஸ் தடுப்பூசி பிரிட்டனிலும், ஆப்பிரிக்க நாடுகளிலும் பரிசோதனை செய்யப்பட்டதில் 89.3 சதவீதம் சிறப்பாகச் செயல்பட்டுள்ளது. இயல்பான கரோனா வைரஸுக்கு மட்டுமல்லாமல், உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் வகைகளுக்கும் எதிராக கோவோவேக்ஸ் சிறப்பாகச் செயல்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சீரம் மருந்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அதார் பூனாவல்லா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் கூறுகையில், "இந்தியாவில் கோவோவேக்ஸ் தடுப்பூசி பரிசோதனை தொடங்கிவிட்டது. இந்தத் தடுப்பூசி அமெரிக்காவின் நோவாவேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீரம் மருந்து நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த கோவோவேக்ஸ் மருந்து ஆப்பிரிக்காவின் கரோனா வைரஸ்களுக்கும், பிரிட்டனின் உருமாறிய கரோனா வைரஸ்களுக்கும் எதிராக 89 சதவீதம் சிறப்பாகச் செயல்படுகிறது. 2021, செப்டம்பர் மாதம் இந்த மருந்து மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என நம்புகிறேன்" எனத் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸுக்கு எதிராக சீரம் நிறுவனம் தயாரிக்கும் 2-வது மருந்து இதுவாகும். இதற்கு முன் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட், அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்துடன் இணைந்து கோவிஷீல்ட் மருந்தைத் தயாரித்தது. இப்போது அமெரிக்க நிறுவனத்துடன் இணைந்து கோவோவேக்ஸ் மருந்தைத் தயாரிக்கிறது.
இந்தியாவில் உள்ள மக்களுக்கு தற்போது கோவாக்ஸின், கோவிஷீல்ட் மருந்துகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இந்த இரு மருந்துகள் உலகின் பல நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT