Published : 27 Mar 2021 01:06 PM
Last Updated : 27 Mar 2021 01:06 PM
கேரள மாநில அரசியலை உலுக்கிய தங்கம் கடத்தல் வழக்கில் முதல்வர் பினராயி விஜயன் மீது அவதூறு பரப்ப முயன்றதாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், இந்த விவகாரத்தில் நீதி விசாரணைக்குப் பரிந்துரைக்க கேரள அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
தங்கம் கடத்தல் வழக்கில் அமலாக்கப் பிரிவு விசாரணை தடம் மாறிச் செல்கிறது. இதில் உண்மை நிலவரம் என்ன என்பதை அறிய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நீதி விசாரணைக்கு உத்தரவிடப்படும் என முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று கூடிய சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இந்த நீதி விசாரணை ஓய்வுபெற்ற நீதிபதி கே.வி.மோகன் தலைமையில் அமைக்கப்படும். இந்த விசாரணைக் குழு தங்கம் கடத்தலில் அமலாக்கப் பிரிவு விசாரணை, தங்கம் கடத்தலில் உண்மை நிலவரம் ஆகியவற்றைக் கண்டறியும் எனத் தெரிவிக்கப்பட்டது.
கேரள அமைச்சரவை மூலம் இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால், அமைச்சரவையின் முடிவு தேர்தல் ஆணையத்தின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்திய தங்கம் கடத்தல் வழக்கில் முக்கியக் குற்றவாளி ஸ்வப்னா சுரேஷை மிரட்டி, முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்க அமலாக்கப் பிரிவு கட்டாயப்படுத்தியதாக ஆடியோ ஒன்று கசிந்தது.
இதை அடிப்படையாக வைத்து கேரள போலீஸார், முதல்வர் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் திட்டமிட்டு அவதூறு பரப்ப முயன்றதாக சிஆர்பிசி 120-பி, 195-ஏ, 192, 167 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்நிலையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்த கேரள போலீஸாரின் செயல் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வி.ஜி.அருண் வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.
இந்நிலையில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் நேற்று அவசரமாக சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் கூடியது. இந்தக் கூட்டத்தில், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் மீது கேரள போலீஸார் வழக்குப் பதிவு செய்த விவகாரத்தை நீதி விசாரணைக்குப் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டது.
கேரள அரசுத் தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், "தங்கம் கடத்தல் வழக்கு, அமெரிக்க டாலர் கடத்தல் வழக்கு ஆகியவற்றை விசாரித்து வரும் அமலாக்கப் பிரிவு தடம் மாறுவதாகத் தெரிகிறது. இதையடுத்து, நீதி விசாரணைக்கு உத்தரவிட அமைச்சரவை முடிவு செய்யப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் விசாரணை ஆணையம் அமைக்கப்படும்" எனத் தெரிவித்தன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT