Last Updated : 27 Mar, 2021 07:49 AM

 

Published : 27 Mar 2021 07:49 AM
Last Updated : 27 Mar 2021 07:49 AM

மேற்கு வங்கம், அசாம் சட்டப்பேரவைத் தேர்தல்; முதல்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது- இளம் வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

மேற்கு வங்கத்தில் 30 மற்றும் அசாமில் 47 என மொத்தம் 77 சட்டப்பேரவை தொகுதிகளில் இன்று முதல்கட்ட தேர்தல் தொடங்கியது. கரோனா பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றி வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தேர்தல் ஆணையம் அறிவித்தபடி தமிழகம், புதுச்சேரி, கேரளா ஆகிய 3 மாநிலங்களில் ஒரேகட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அசாமில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 6 வரை 3 கட்டமாகவும் மேற்கு வங்கத்தில் மார்ச் 27 முதல் ஏப்ரல் 29 வரை 8 கட்டங்களாகவும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

இதன்படி அசாமில் 47 தொகுதிகளும் மேற்கு வங்கத்தில் 30 தொகுதிகளும் என 77 தொகுதிகளுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு இன்று காலை சரியாக 7 மணிக்குத் தொடங்கியது.

தற்போது கரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தொடங்கியுள்ள நிலையில் வாக்காளர்கள் முகக் கவசம் அணிவது, கிருமி நாசினி வழங்கல், உடல் வெப்ப பரிசோதனை, சமூக இடைவெளி போன்ற கரோனா தடுப்பு விதிமுறைகள் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு பணியில் மாநில போலீஸாருடன் மத்தியப் படையினரும் ஈடுபட்டுள்ளனர்.

அசாமில் காலை வாக்குப்பதிவு தொடங்கியதிலிருந்தே மக்கள் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் வாக்களிக்கக் குவிந்துள்ளனர்.

அசாமில் இன்று தேர்தலை சந்திக்கும் 47 தொகுதிகளும் சோனித்பூர், விஸ்வ நாத், நாகாவ்ன், கோலாகட், ஜோர்கத், சிவசாசர், லக்கிம்பூர் தேமாஜி, திப்ரூகர், தின்சுகியா உள்ளிட்ட 12 மாவட்டங்களில் உள்ளன. சுயேச்சை வேட்பாளர்கள் உட்பட பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 264 பேர் களத்தில் உள்ளனர்.

அசாம் முதல்வர் சர்வானந்த சோனா வால், மாநில காங்கிரஸ் தலைவர் ரூபன் போரா, அசாம் கனபரிஷத் தலைவர் அதுல் போரா, செயல்தலைவர் கேஷவ் மகந்தா உள்ளிட்டோர் முதல் கட்ட தேர்தலை சந்திக்கும் முக்கிய தலைவர்கள் ஆவர்.

மேற்குவங்கத்திலும் ஜார்கிராம், மேற்கு மித்னாபூர் ஆகிய மாவட்டங்களில் வாக்குச்சாவடியில் வாக்காளர்கள் கூட்டம் களை கட்டியுள்ளது.

மேற்கு வங்கத்தில் இன்று தேர்தலை சந்திக்கும் 30 தொகுதிகளும் ஒரு காலத் தில் மாவோயிஸ்ட் ஆதிக்கம் செலுத்தி வந்த ஜங்கல் மெஹல் பிராந்தியத்தில் உள்ளன. இங்கு திரிணமூல் காங்கிரஸ், பாஜக சார்பில் தலா 29 பேர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் 18 பேர், காங்கிரஸ் சார்பில் 6 பேர், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் 4 பேர், அகில இந்திய பார்வர்டு பிளாக் சார்பில் 2 பேர் உட்பட மொத்தம் 191 பேர் களத்தில் உள்ளனர்.

பிரதமர் மோடி அழைப்பு:

அசாம் தேர்தலை ஒட்டி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், "அசாம் முதற்கட்டத் தேர்தல் தொடங்கியது. வாக்களிக்கத் தகுதியானோர் அனைவரும் பங்கேற்று வரலாற்று எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டுகிறேன். குறிப்பாக இளம் வாக்காளர்கள் வாக்களிக்க அழைப்புவிடுக்கிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

— Narendra Modi (@narendramodi) March 27, 2021

அதேபோல் மேற்குவங்க தேர்தல் குறித்து ட்விட்டரில், "மேற்குவங்கத்தில் முதல்கட்ட தேர்தல் தொடங்கிவிட்டது. வாக்காளர்கள் அனைவரும் தங்களின் கடமையை தவறாமல் ஆற்றி, வரலாறு படைக்க வேண்டுகிறேன்" எனக் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x