Published : 26 Mar 2021 08:34 PM
Last Updated : 26 Mar 2021 08:34 PM
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மாறாக, பிரதமர் மோடி தாடி வளர்க்கிறார் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கிண்டல் செய்தார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. இதில் 30 தொகுதிகளுக்கு மட்டும் நாளை முதல்கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.
இதற்கிடையே பாசிம் மெதானப்பூர் மாவட்டத்தில் உள்ள தாஸ்பூர் பகுதியில் திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது அவர் பேசியதாவது:
''நான் வாக்குப்பதிவு முடியும் வரை அதாவது ஏப்ரல் 1-ம் தேதி வரை நந்திகிராமில்தான் இருப்பேன். ஏனென்றால், பாஜகவினர் வெளிமாநில குண்டர்கள் மூலம் வாக்குகளைக் கொள்ளையடிக்கத் திட்டமிட்டுள்ளார்கள். ஆதலால், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இந்தியப் பொருளாதாரம் கடினமான பாதையில் இருக்கிறது. தொழில்துறையில் எந்த வளர்ச்சியும் இல்லை. பிரதமர் மோடியின் தாடியில் உள்ள வளர்ச்சியைத் தவிர பொருளாதாரத்தில் வளர்ச்சி இல்லை. நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மாறாக, பிரதமர் மோடி தாடி வளர்த்துக் கொண்டிருக்கிறார். சில நேரங்களில் ரவிந்தீரநாத் தாகூர் போல் உடை அணிகிறார். சில நேரங்களில் மகாத்மா காந்தி போல் உடை அணிகிறார்.
என்றாவது ஒருநாள் இந்த தேசம் முழுவதும் விற்கப்பட்டு, நரேந்திர மோடி பெயருக்கு மாற்றப்படும் காலம் வெகுதொலைவில் இல்லை. நாட்டில் ஜனநாயகத்தின் கழுத்தை பாஜக நெரிக்கிறது.
எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த அனைவரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பணிகளிலும் பிரச்சாரங்களிலும் பரபரப்பாக இருக்கிறோம். ஆனால், அரசியலமைப்புச் சட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, சட்டங்களை இயற்றி, டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தைப் பறித்து, துணைநிலை ஆளுநருக்கு அதிகமான அதிகாரத்தை அளிக்கிறது. இது வெட்கக்கேடானது.
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்துக்காக வங்கதேச நடிகர் ஃபிர்தாஸ் வருவதாக இருந்தார். அவருக்கு மத்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப்புக்காக மோடி பிரச்சாரம் செய்தபோது, இதை ஏன் அவருக்குச் செய்திருக்கக் கூடாது?
பாஜக என்பது பிக்ஸட் ஃபிராட் அன்ட் ஜன்ஜல் (குப்பை) கட்சி. தேர்தலில் வெற்றி பெறுவதற்கு எந்த எல்லைக்கும் அந்தக் கட்சி செல்லும். வாக்குப்பதிவு முடிந்துவுடன் மக்களின் பணி முடிந்துவிடாது. இவிஎம் இயந்திரங்களுக்குப் பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
உ.பி. மத்தியப் பிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் ஆட்சியில் இருக்கம் பாஜக அங்கிருந்து போலீஸாரை மேற்கு வங்கத்துக்கு வரவழைத்துத் தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. அந்த போலீஸார் பாஜகவுக்கு ஆதரவாக நடக்கலாம். ஏதாவது இயல்புக்கு மாறாக நடந்தால், போராட்டத்தில் ஈடுபடுங்கள். தாய்மார்களே, சகோதரிகளே! உங்களிடம் யாரேனும் தவறாக நடந்தால், போராட்டத்தில் ஈடுபடுங்கள்.
உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஏராளமான குண்டர்கள் நந்திகிராமில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். வெளிமாநிலங்களில் இருந்து குண்டர்கள் அழைத்து வரப்பட்டு தேர்தலைச் சீர்குலைக்கத் திட்டமிட்டுள்ளார்கள்''.
இவ்வாறு மம்தா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT