Last Updated : 26 Mar, 2021 04:34 PM

 

Published : 26 Mar 2021 04:34 PM
Last Updated : 26 Mar 2021 04:34 PM

அசாமில் நாளை முதல்கட்டத் தேர்தல்; 47 தொகுதிகளில் வாக்குப் பதிவு: 264 வேட்பாளர்கள் போட்டி

கோப்புப்படம்

குவஹாட்டி

அசாம் மாநிலத்தில் நாளை முதல் கட்டமாக 47 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடக்கிறது. கரோனா வைரஸ் பரவல் காரணமாக வாக்குப்பதிவுக்குக் கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 264 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் மார்ச் 27, ஏப்ரல் 1, மற்றும் 6-ம் தேதிகளில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடக்கிறது. முதல் கட்டமாக நாளை நடக்கும் 47 தொகுதிகளிலும் பாஜக-ஏஜிபி கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, புதிதாக உருவாகிய அசாம் ஜதியா பரிஷத் (ஏஜிபி) என மும்முனைப் போட்டி நிலவுகிறது.

இந்தத் தேர்தலில் மொத்தம் 23 பெண் வேட்பாளர்கள் உள்பட 264 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். கரோனா வைரஸ் பரவலையடுத்து, காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிக் கூடுதலாக ஒரு மணி நேரமாக மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாக்குப்பதிவின்போது எந்தவிதமான அசம்பாவிதங்களும் நடைபெறாமல் தடுக்க மாநில போலீஸாரோடு இணைந்து, மத்திய பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டுள்ளனர். இதுவரை மத்தியப் படையினர் எவ்வளவு பேர் பாதுகாப்பில் உள்ளார்கள் என்பது குறித்து அதிகாரபூர்வமாகத் தெரிவிக்கவில்லை. பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதலாக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த 47 தொகுதிகளிலும் மொத்தம் 81.09 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 11,537 வாக்குப்பதிவு மையங்கள், 1,917 துணை வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பெண்கள் மட்டும் நிர்வகிக்கும் வகையில் 479 வாக்குப்பதிவு மையங்கள் தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

இந்த 47 தொகுதிகளில் 5,772 வாக்குப்பதிவு மையங்கள் பதற்றமானவை என்பதால், அந்த மையங்கள் கேமரா மூலம் கண்காணிக்கப்படுகின்றன. வாக்காளர்கள் புகைப்படம் எடுத்தபின் வாக்களிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்கும் வகையில் அவர்களுக்காக சக்கர நாற்காலிகள், இ-ரிக்ஷாக்கள் ஆகியவை ஒவ்வொரு வாக்குப்பதிவு மையத்திலும் அமைக்கப்பட்டுள்ளன.

பாஜக 39 தொகுதிகளிலும், ஏஜிபி கட்சி 8 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. காங்கிரஸ் கட்சித் தரப்பில் ஏஐயுடிஎப், சிபிஐ (எம்எல்-எல்), அன்சாலிக் கன நோர்ச்சா ஆகியவை போட்டியிடுகின்றன. புதிதாக உருவான ஏஜேபி கட்சி 41 இடங்களில் போட்டியிடுகிறது. 78 சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

முதல்வர் சர்பானந்த சோனாவால் மஜூலி தொகுதியிலும், இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான ராஜிப் லோச்சன் பெகுவும் போட்டியிடுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x