Published : 26 Mar 2021 03:32 PM
Last Updated : 26 Mar 2021 03:32 PM
அசாம் மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் 47 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது. 2-ம் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 1-ம் தேதி 39 தொகுதிகளுக்கும், 3-வது கட்டத் தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி 40 தொகுதிகளுக்கும் நடக்கிறது.
அசாம் மாநிலத்தில் ஆளும் பாஜக, ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் முயற்சியில் தீவிரமாகப் பிரச்சாரம் செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியும் ஆட்சியைப் பிடிக்கக் களத்தில் இறங்கி அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. பாஜக, காங்கிரஸ் ஆகிய இரு கட்சிகளும் பல்வேறு பிரச்சினைகளை முன்னிறுத்தி தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், கமால்பூரில் இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தேர்தல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
''அசாம் மாநிலத்தில் லவ் ஜிகாத்தினாலும், காதல் செய்பவர்களாலும் பல்வேறு பிரச்சினைகள் குடும்பத்தில் நடக்கின்றன. இதற்கு முடிவு கட்டும் வகையில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், அசாமில் லவ் ஜிகாத்துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்படும்.
அசாம் மாநிலத்தின் கலாச்சாரம், நாகரிகம் ஆகியவற்றைப் பாதுகாக்க சட்டங்களும், கொள்கைகளும் வகுக்கப்படும். பிரிவினைவாதம், இனவாதப் போக்கு, ஆகியவற்றைப் பரப்பும் , ஆதரவு அளிக்கும் அமைப்புகள், தனிநபர்களை அடையாளம் கண்டு ஒரு ஒழுங்குமுறைக் கொள்கையை உருவாக்க பாஜக தேர்தல் அறிக்கையில் உறுதி தரப்பட்டுள்ளது.
ஆனால், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை என்பது, தேர்தல் பிரச்சாரத்துக்கு மட்டும்தான் உதவும். ஆனால், பாஜகவின் தேர்தல் அறிக்கை செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டு நடைமுறைப்படுத்தப்படும்.
ஏஐயுடிஎப் தலைவர் பஹ்ரூதீன் அஜ்மல்தான் அசாம் மாநிலத்தின் அடையாளம் என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசி இருக்கிறார். ஆனால், அசாம் மாநிலத்தின் அடையாளத்தைச் சரியாக ராகுல் காந்தி புரிந்து கொள்ளவில்லை
அசாம் மாநிலத்தின் அடையாளம் என்பது, வைஷ்ணவ சாதுக்களான ஸ்ரீமந்த சங்கரதேவ் மற்றும் மகாதேவ் ஆகியோரோடு தொடர்புடையது. இவர்கள்தான் முகலாயப் படையெடுப்பிலிருந்து இந்தப் பகுதியைக் காத்தார்கள்.
அசாம் மாநிலத்தின் அடையாளமாக அஜ்மல் மாறுவதையும், அதற்கு காங்கிரஸ் முயற்சி எடுப்பதையும் அனுமதிக்க மாட்டோம். சட்டவிரோதமாக இங்கு ஊடுருவும் நபர்களை காங்கிரஸ் கட்சியும், ஏஐயுடிஎப் கட்சியும் தடுக்குமா?
அசாம் மாநிலத்தில் தருண் கோகய் முதல்வராக இருந்தபோது, ஏஐயுடிஎப் கட்சியின் தலைவர் அஜ்மலை, யார் அவர் என்று கேட்டது ராகுல் காந்திக்கு நினைவிருக்கிறதா. ஆனால், இன்று தேர்தல் நேரத்தில் வாக்குகளைப் பெறுவதற்காக அஜ்மலுடன் காங்கிரஸ் கட்சி கைகோர்த்துள்ளது.
ராகுல் காந்தி ஒரு சுற்றுலாப் பயணி. தேர்தல் நேரத்தில் 2 அல்லது 3 நாட்கள் வந்து தங்கிவிட்டு சென்றுவிடுவார். அடுத்த 5 ஆண்டுகளில் மறைந்துவிடுவார்.
அசாம் மக்கள் முன், பிரதமர் மோடியின் வளர்ச்சித் திட்டங்கள், அவரின் மக்களுக்கான சேவை, ராகுல் காந்தியின் சுற்றுலா மற்றும் அஜ்மலின் ஊடுருவல்காரர்களுக்கான திட்டம் ஆகிய 3 உருவங்கள்தான் நினைவில் உள்ளன. தங்களுக்கு என்ன தேவை என்பதை அசாம் மக்கள் முடிவு செய்வார்கள்''.
இவ்வாறு அமித் ஷா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT