Published : 26 Mar 2021 02:55 PM
Last Updated : 26 Mar 2021 02:55 PM
இந்தியாவில் 30 சதவிகித முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் மேலும் 4 பாகிஸ்தான்களை உருவாக்கலாம் என திரிணமூல் காங்கிரஸின் நிர்வாகி கூறியுள்ளார். இவரது பேச்சால் அம்மாநில தேர்தல் பிரச்சாரத்தில் சர்ச்சை கிளம்பியுள்ளது.
நாளை முதல் எட்டு கட்டங்களாக மேற்கு வங்க மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெறுகிறது. இங்குள்ள சுமார் 33 சதவிகித முஸ்லிம் வாக்காளர்கள் அதில் முக்கிய அங்கம் வகிக்கின்றனர்.
இவற்றை கடந்த பத்து வருடங்களாக இங்கு திரிணமூல் காங்கிரஸ் சார்பில் ஆளும் முதல்வர் மம்தா பானர்ஜி பெற்று வந்தார். இந்தமுறை தேர்தலில் முஸ்லிம் வாக்குகள் பிரியும் நிலை உருவாகி உள்ளது.
முதல்வர் மம்தாவிற்கு மிக நெருக்கமான முஸ்லிம் தலைவரான புதிய கட்சியை துவக்கி விட்டார். இந்திய மதசார்பாற்ற முன்னணி எனும் பெயரிலாக அக்கட்சி, இடதுசாரிகள் மற்றும் காங்கிரஸ் கூட்டணியுடன் இணைந்து போட்டியிடுகிறது.
இதனால், முஸ்லிம் வாக்குகள் பிரியும் சூழல் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்பட்டுள்ளது. இவற்றை மேலும் பிரிக்கும் வகையில் ஹைதராபாத்தின் எம்.பியான அசதுத்தீன் உவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சியும் இதன் தேர்தலில் போட்டியிடுகிறது.
இதன் காரணமாக, பாதிக்கப்படும் திரிணமூல் காங்கிரஸின் முஸ்லிம் தலைவர்கள் மிகவும் கொதிப்புடன் உள்ளனர். இதை வெளிக்காட்டும் வகையில் நேற்று பிரச்சாரம் செய்த அக்கட்சியின் பிர்பும் மாவட்ட நிர்வாகியான ஷேக் ஆலம் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார்
அதில் ஆவேசமாக ஷேக் ஆலம் கூறும்போது, ‘‘சிறுபான்மையினரான நாம் இந்தியாவில் 30 சதவிகிதம் உள்ளோம். மீதம் உள்ள 70 சதவிகித பெரும்பான்மையினர் வாக்குகளுடன் பாஜக தொடர்ந்து ஆட்சி செலுத்தும் கனவு காண்கிறது.
இதற்காக அவர்கள் வெட்கப்பட வேண்டும். இந்தியாவின் 30 சதவிகித முஸ்லிம்கள் ஒன்றிணைந்தால் மேலும் 4 பாகிஸ்தான்களை உருவாக்கினால் 70 சதவிகிதத்தினரால் என்ன செய்ய முடியும்?’’ எனக் குறிப்பிட்டார்.
இந்த பேச்சை தொடர்ந்து உருவான சர்ச்சையால் அதை பாஜக தன் பிரச்சாரத்தில் எடுத்துள்ளது. இந்த வீடியோ பதியையும் இணைத்து மேற்கு வங்க மாநில பாஜகவின் முக்கிய தலைவரான அமீத் மாளவியா ட்வீட் செய்துள்ளார்.
அதில் மாளவியா குறிப்பிடுகையில், ‘‘திரிணமூல் காங்கிரஸின் நிர்வாகி ஷேக் ஆலம் கருத்தை முதல்வர் மம்தா ஆதரிக்கிறாரா? இதனால் தான் இங்கு இந்துக்கள் துர்கா பூஜைக்கும் நீதிமன்ற அனுமதி பெற வேண்டியதுள்ளதா?’’என விமர்சித்துள்ளார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் செய்தியாளர்களிடம் பேசிய ஷேக் ஆலம், தான் பாகிஸ்தானை உருவாக்கும் எண்ணத்தில் அவ்வாறு பேசவில்லை என விளக்கம் அளித்துள்ளார். முஸ்லிம்களை மிரட்டினால் அவர்களும் பதிலளிக்க சக்திவாய்ந்தவர்கள் என்பதை சுட்டிக் காட்டவே அப்படி கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT