Published : 26 Mar 2021 03:15 AM
Last Updated : 26 Mar 2021 03:15 AM
மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஜங்கல் மெஹலின் (காட்டுப் பகுதி) 42 தொகுதிகள் முக்கிய இடம் வகிக்கின்றன. இது, திரிணமூல் காங்கிரஸின் ஆளும் முதல்வர் மம்தாவின் கைகளிலிருந்து பாஜகவிற்கு நழுவும் சூழல் உருவாகி வருகிறது.
ஜார்க்கண்ட் மாநில எல்லையில் புருலியா, பங்குரா, ஜர்கிராம், விஷ்ணுபூர், பிர்பும் மற்றும் மேற்கு மிட்னாபூர் ஆகிய மாவட்டங்களில் 42 சட்டப்பேரவையின் தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தின் தென்மேற்கு பகுதியான இங்கு பெரும்பாலும் காடுகள் நிறைந்ததால் அதை ஜங்கல் மெஹல் (காட்டுப்பகுதி) என்றழைக்கிறார்கள். பழங்குடியினர் வசிக்கும்பகுதியான இங்கு மாவோயிஸ்டுகள் நடமாட்டம் அதிகம்.
கடந்த 2011 சட்டப்பேரவை தேர்தலில் இந்த தொகுதிகளை இடதுசாரிகளிடம் இருந்து மம்தா பானர்ஜி பறித்தார். அதன்பின் மாவேயிஸ்டுகளின் நடமாட்டம் குறைந்தாலும், காட்டுப் பகுதியில் வளர்ச்சி ஏற்படவில்லை.
இதன் காரணமாக, சுமார் 10 வருடங்கள் மட்டுமே நீட்டித்த மம்தாவின் செல்வாக்கு ஜங்கல் மெஹலில் பாஜகவால் மெல்ல, மெல்ல சரியத் துவங்கியது. இதற்கு பாஜகவின் தாய் அமைப்பான ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங் அடித்தளம் வகுத்திருந்தது.
இதன் சார்பில் பழங்குடியின ருக்காக சரஸ்வதி சிசு மந்திர் பள்ளிகள், சமூக உதவிக்காக வன்வாசி கல்யாண் கேந்திரா போன்றன அமைக்கப்பட்டன. இவற்றில் 350 சிசு மந்திர் பள்ளிகளை மம்தா அரசு மூட வைத்தது அவருக்கு எதிராக அமைந்தது.
கடந்த 2014 மக்களவை தேர்தல் முதல் பாஜக இக்காட்டுப் பகுதியில் சிறப்பு கவனம் செலுத்தியது. பாஜகவின் தேர்தல் பொறுப்பாளர் கைலாஷ் விஜய் வர்கியா, ஜங்கல் மெஹல் வாசிகளை சந்தித்து பேசினார். பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் இங்கு தனது பிரச்சாரக் கூட்டங்களை அதிகமாக நடத்தினர். இதன் பலனாக, 2019 மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு 47 சதவீத வாக்குகளுடன் இங்குள்ள எட்டு தொகுதிகளில் ஐந்து கிடைத்தன. சட்டப்பேரவை தொகுதிகளை கணக்கிட்டால் ஜங்கல் மெஹலின் 42 தொகுதிகளில் 31 பாஜக வசமானது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் அப்பகுதியின் மூத்த இந்தி பத்திரிகையாளரான சத்ய பிரகாஷ் கூறும்போது, ‘இம்மாநிலத்தில் பாஜகவுக்கு முதல் பகுதியாக ஆதரவளித்தது ஜங்கல் மெஹல்வாசிகள்தான். இதன் முக்கியத் தலைவரான ஷிஷிர் அதிகாரி திரிணமூல் காங்கிரஸிலிருந்து மாநிலத்தின் முதல் தலைவராக பாஜகவில் இணைந்தார். இவரை தம் கட்சியின் எம்.பி.யாக்கி பாஜக அழகு பார்த்ததால் பலரும் மம்தாவிடம் இருந்து பாஜகவிற்கு தாவத் துவங்கினர். பழங்குடியினருக்கு எனத் தனியாகக் கொள்கைகள் எதுவும் கிடையாது. இடதுசாரிகளை போல் மம்தா அரசிலும் வளர்ச்சி கிடைக்காததால் அவர்கள், பாஜக பக்கம் சாயத் துவங்கி விட்டனர்’ எனத் தெரிவித்தார்.
இடதுசாரிகள் ஆட்சியில் போராட்டக் களமாகி மம்தாவை முதல்வராக்க காரணமான நந்திகிராம் தொகுதி இத்தேர்தலில் மீண்டும் முக்கியத்துவம் பெற் றுள்ளது. இதனால், அங்கு போட்டியிடும் மம்தாவை எதிர்த்து பாஜக எம்.பி ஷிஷிர் அதிகாரியின் மகனான சுவந்து அதிகாரியை பாஜக வேட்பாளராக்கி உள்ளது. இதன்மூலம், படிப்பறிவு குறைந்த பழங்குடிகளுக்கு தம் கட்சி மட்டுமே முக்கியத்துவம் அளிப்பதாகக் கூறி ஜங்கல் மெஹலின் வாக்குகளை அள்ள பாஜக திட்டமிடுகிறது.
இச்சூழலையை சமாளிக்க மம்தா, தன் தேர்தல் பொறுப் பாளராக இங்கு முன்னாள் மாவோயிஸ்டான சத்ரதார் மஹதோவை நியமித்துள்ளார். மம்தாவுக்கு ஆதரவளித்துள்ள பழங்குடி தலைவரான ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் இப்பகுதியில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார். 295 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலின் முடிவுகள் மே 2-ல் வெளியாகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT