Published : 25 Mar 2021 06:09 PM
Last Updated : 25 Mar 2021 06:09 PM
மேற்கு வங்கத்தில் முதல் கட்டமாக 30 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு வரும் 27-ம் தேதி தேர்தல் நடைபெறுவதையடுத்து, இன்று மாலை 5 மணியுடன் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வந்தது.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக 30 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடக்கிறது. இதையடுத்து தேர்தல் வாக்குப்பதிவுக்கு 24 மணி நேரத்துக்கு முன்பாக தேர்தல் பிரச்சாரம் முடிவுக்கு வரவேண்டும் என்பதால் இன்று மாலை 5 மணியுடன் பிரச்சாரம் முடித்துக் கொள்ளப்பட்டது.
பழங்குடி மக்கள் அதிகம் கொண்ட புர்லியா, பாங்குரா, ஜார்கிராம், புர்பா, மெதினாபூர், பஸ்சிம் மெதினாபூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 30 தொகுதிகளிலும் தேர்தல் நடக்கிறது.
இந்த 30 தொகுதிகளிலும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாஜக சார்பில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, உ.பி. முதல்வர் ஆதித்யநாத், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா, ஸ்மிருதி இரானி ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.
தேர்தல் பிரச்சாரத்தில் சாரதா சிட்பண்ட் ஊழல், நராடா டேப் விவகாரம், அம்பான் புயலில் நடந்த ஊழல், கரோனா வைரஸ் பரவலை திரிணமூல் அரசு கையாண்டது ஆகியவற்றை முன்வைத்து பாஜக தலைவர்கள் மம்தா பானர்ஜியைக் கடுமையாக விமர்சித்தனர்.
மாநிலத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டம், பிஎம் கிசான் திட்டம், சம்மான் நிதி திட்டம் உள்ளிட்ட 80 திட்டங்களை அமல்படுத்த மம்தா மறுக்கிறார். இதனால் ஏழைகள், விளிம்புநிலை மக்கள், பழங்குடிகள், தலித்துகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பாஜக கடுமையாக விமர்சித்தது.
பெரும்பாலான தேர்தல் பிரச்சாரங்களில் பாஜக தலைவர்கள் திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் "திட்டங்களில் கமிஷன்" பெறுகிறார்கள் என்று குற்றம் சாட்டினர்.
அதே நேரத்தில் மம்தா பானர்ஜி தனது உடைந்த காலுடன் 30 தொகுதிகளுக்கும் சென்று தேர்தல் பிரச்சாரம் செய்தார். பிரதமர் மோடி தலைமையில் இருக்கும் மத்திய அரசு மக்கள் விரோத அரசு, பிரதமர் ஒரு பொய்யர் என்று மம்தா தேர்தல் பிரச்சாரத்தில் குற்றம் சாட்டினார்.
முதல்கட்டத் தேர்தல் நடக்கும் 30 தொகுதிகளிலும் கடந்த இரு தேர்தல்களிலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி ஏராளமான வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் இந்த 30 தொகுதிகள் தொடர்புடைய மக்களவைத் தொகுதிகளை பாஜக வென்றது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT