Published : 25 Mar 2021 12:18 PM
Last Updated : 25 Mar 2021 12:18 PM

கேரளாவில் மீண்டும் இடதுசாரி கூட்டணி ஆட்சி; கூடுதல் வாக்குகள் பெறும் பாஜக:  கருத்துக் கணிப்பு முடிவு வெளியீடு

புதுடெல்லி

கேரள மாநிலத்தில் இடதுசாரி கூட்டணி மீண்டும் ஆட்சியை கைபற்றும் என டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. கேரளாவில் ஆளும் கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கும்தான் கடுமையான போட்டி இருந்து வருகிறது. பாஜக தனித்து போட்டியிடுகிறது.

2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் இதே கூட்டணி களம் கண்டன. ஆனால் இடதுசாரி கூட்டணி பெரும் வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் உள்ள வலிமை மிக்க ஈழவ சமூகம் சார்ந்த அரசியல் அமைப்பான பாரத் தர்ம ஜனசேனாவுடன் கூட்டணி வைத்து பாஜக போட்டியிட்டது. 15.8 சதவீத வாக்குகளுடன், ஓரிடத்தில் பாஜக வென்றது.

கேரளாவில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் இடையே மட்டுமே இதுவரை நேரடி போட்டி நிலவும் நிலையில் இந்த முறை தனது வாக்கு வங்கியை காண்பிக்கும் நோக்குடன் பாஜகவும் களமிறங்கியுள்ளது.

இந்தநிலையில் தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகி வருகின்றன. கேரளாவில் ஏற்கெனவே 2 கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன.

தேர்தலில் மீண்டும் ஆட்சி அமைக்க போவது யார் என்பது குறித்து தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டு வெளியிடப்பட்டு வருகின்றன.

டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து கேரள சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதன் விவரம் வருமாறு:

மொத்த இடங்கள்: 140

இடதுசாரி கூட்டணி: 77

காங்கிரஸ் கூட்டணி: 62

பாஜக கூட்டணி: 1

----------

யாருக்கு எவ்வளவு வாக்கு?


கேரளாவில் வாக்கு சதவீதத்தை பொறுத்தவரையில் எந்த கூட்டணி எவ்வளவு வாக்குகள் பெறும் என கீழ்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடதுசாரி கூட்டணி: 42.4%

காங்கிரஸ் கூட்டணி: 38.6%

பாஜக கூட்டணி: 16.4%

மற்றவர்கள்: 2.6%


இவ்வாறு டைம்ஸ் நவ் தொலைக்காட்சியும், சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது. இதில் இடதுசாரி கூட்டணி கடந்த தேர்தலை ஒப்பிடுகையில் சற்று குறைவான வாக்குகளையும், காங்கிரஸ் அணி ஏறக்குறைய அதே அளவு வாக்குகளையும் பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலை ஒப்பிட்டால் பாஜக 1.6 சதவீத வாக்குகள் கூடுதலாக பெறும் என கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x