Published : 24 Mar 2021 08:21 PM
Last Updated : 24 Mar 2021 08:21 PM
முத்தலாக் தடை சட்டம் கொண்டுவந்தது போல் முஸ்லிம் பெண்களை பர்தா அணிவதிலிருந்தும் விடுதலை அளிக்குமாறு கோரிக்கை எழுந்துள்ளது. இப்படி ஒரு கருத்தைக் கூறி உத்தரப் பிரதேச பாஜக அமைச்சர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா புதிய சர்ச்சையை துவக்கி வைத்துள்ளார்.
பாஜக ஆளும் உ.பி மாநில நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருப்பவர் ஆனந்த் ஸ்வரூப் சுக்லா. இவர் சமீபத்தில் முஸ்லிம்களின் தொழுகைக்காக மசூதிகளில் ஒலிக்கப்படும் பாங்கு ஓசையைத் தடை செய்யக் கோரினார்.
இதற்காக அமைச்சர் சுக்லா தனது மாவட்டமான பலியாவின் ஆட்சியருக்கு கடிதம் எழுதி சர்ச்சையை கிளப்பினார். இது அடங்கும் முன்பாக பர்தா மீதும் கோரிக்கை எழுப்பி ஒரு புதிய சர்ச்சையை துவக்கி உள்ளார் அமைச்சர் ஸ்வரூப் சுக்லா.
இது குறித்து உ.பி. மாநில அமைச்சரான ஆனந்த் ஸ்வரூப் சுக்லா கூறும்போது, "நாட்டிலுள்ள முஸ்லிம் பெண்களுக்கான முத்தலாக் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இதைப்போலவே அவர்கள் அணியும் பர்தாக்களில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும்.
பல வெளிநாடுகளில் முஸ்லிம் பெண்கள் பர்தா அணியத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பர்தாக்களை அணிய வைத்து முஸ்லிம் பெண்கள் மனிதநேயமற்ற முறைக்கு ஆளாகின்றனர்.
முற்போக்குவாதிகள் இந்த பர்தாக்களை அணிய அனுமதிப்பதில்லை. அவர்கள் பர்தாக்களுக்கு ஆதராவாகவும் பேசுவதில்லை.’ எனத் தெரிவித்தார்.
கடந்த வாரம் மசூதிகளின் பாங்கு ஒலியின் மீது கேள்வி எழுப்பிய உ.பி., அமைச்சர் ஸ்வரூப் சுக்லா, அதை தொல்லையாக நினைப்பவர்கள் அவசர எண் 112 இல் அழைத்து புகார் அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT