Published : 24 Mar 2021 01:28 PM
Last Updated : 24 Mar 2021 01:28 PM
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்த செயலுக்கு அதிமுக, பாஜக கூட்டணியை மக்கள் தேர்தலில் தண்டிக்க வேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே நடந்த இறுதிக்கட்டப் போரில் ஈழத்தமிழர்கள் லட்சக்கணக்கானோர் கொன்று குவிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கான மக்களைக் காணவில்லை.
இலங்கை ராணுவம் தமிழர்கள் மீது இன அழிப்பு நடவடிக்கையை செய்து, மனித உரிமைகள் மீறலில் ஈடுபட்டது தொடர்பாக அந்நாட்டின் மீது சர்வதேச மனித உரிமைகள் ஆணையம் போர்க் குற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று பிரிட்டன், கனடா உள்ளிட்ட 6 நாடுகள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் தீர்மானம் கொண்டுவந்தன.
ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் நேற்று நடந்த வாக்கெடுப்பில் தீர்மானத்துக்கு ஆதரவாக 22 நாடுகளும், எதிராக 11 நாடுகளும் வாக்களித்தன. இந்தத் தீர்மானத்தில் வாக்களிக்காமல் இந்தியா உள்ளிட்ட 14 நாட்கள் பங்கேற்கவில்லை.
இலங்கைக்கு எதிரான தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இந்தியா புறக்கணித்தமைக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ப.சிதம்பரம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், "ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல் இந்தியா ஒதுங்கிக் கொண்டது. இது தமிழ் மக்களின் விருப்பம், ஒருமித்த உணர்வுகளுக்குச் செய்யப்பட்ட துரோகம்.
தமிழர்களின் நலனுக்கு எதிராகச் செயல்படும் அதிமுக-பாஜக கூட்டணியை தமிழக மக்கள் தேர்தலில் தண்டிக்க வேண்டும்.
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியா வாக்களிக்காமல் ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என்று இந்தியப் பிரதிநிதியை வெளியுறவுத்துறை அமைச்சர் உத்தரவிட்டிருந்தால், தமிழர்களின் நலனுக்கு எதிராகச் செயல்பட்ட அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT