Published : 10 Jan 2014 09:03 PM
Last Updated : 10 Jan 2014 09:03 PM
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதில் புதிய நடைமுறைகளை கொண்டுவரப்படும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
காங்கிரஸ் வேட்பாளர்களை விரைந்து தேர்வு செய்வதற்காக, அனைத்து மாநிலங்களிலும் கட்சி வேட்பாளர்களை தாமதமின்றி தேர்வு செய்ய பரிசீலனைக் குழுக்களை காங்கிரஸ் கட்சி வியாழக்கிழமை இரவு அமைத்தது.
இந்தப் பரிசீலனைக் குழுக்களின் தலைவர்களை முதல் முறையாக, காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி இன்று (வெள்ளிக்கிழமை) சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அந்தக் கூட்டத்தில ராகுல் பேசும்போது, கட்சியின் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட அரசியல் நடவடிக்கைகளில் முடிவு எடுப்பதில் சாமானிய மக்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டியது அவசியம் என அவர் வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, வெற்றி வாய்ப்பு மிக்கவராகவும், சரியான அரசியல் அனுபவம் மிக்கவராகவும், குற்றப்பின்னணி இல்லாதவராகவும் வேட்பாளர்கள் இருக்கவேண்டும் என்பன போன்ற அம்சங்கள் அடிப்படையில் வேட்பாளர்கள் தேர்வு இருக்கவேண்டும் என்றும் அவர் காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்புக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல் காந்தி, கட்சியில் உள்ளவர்களின் கருத்துகளை பிரதிபலிக்கும் வகையில் வேட்பாளர்கள் தேர்வு அமையும் என்றும், வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
புதிய நடைமுறைகளை கொண்டு வந்து அதன்படி டிக்கெட் கொடுப்பது பற்றி முடிவு செய்யப்படும் என்ற அவர், இது தொடர்பாக நீண்ட நாளாகவே கட்சிக்குள் பல்வேறு மாநிலங்கள் சம்பந்தப்பட்ட ஆலோசனை நடைபெற்று வருகிறது என்றும், இதை ஒரு அமைப்புக்குள் கொண்டுவந்து செய்து வருகிறோம் என்றும் கூறினார்.
மேலும், எல்லா டிக்கெட்டுகளும் தேசிய நிலையில் இறுதி செய்யப்படும் என்றும், வெகு விரைவில் வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். அப்படி நிகழ்வது இதுவே முதல்முறை என்றும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், கட்சிக்குள் அமைப்பையும் நடைமுறையையும் கொண்டுவரவும், கட்சியில் உள்ளவர்களின் குரலை பிரதிபலிக்கும் வகையிலும் வேட்பாளர் தேர்வு அமையும் என நினைப்பதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.
இதனிடையே, டெல்லியில் வரும் 17-ம் தேதி நடக்கும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தி கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் மிகுதியாகியிருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT