Published : 24 Mar 2021 03:13 AM
Last Updated : 24 Mar 2021 03:13 AM
மார்க்சிஸ்ட், பாஜக, காங்கிரஸ் என தேசியக் கட்சிகள் மோதி கொள்ளும் கேரள தேர்தலில் தனித்து களம் காண்கிறது ‘ட்வென்டி 20’ என்ற அரசியல் கட்சி.
பொதுவாக அரசியல் கட்சிகள் தங்களுக்கு நிதி எங்கிருந்து வருகிறது என்பதை வெளிப்படுத்துவது இல்லை. அதிலும் கார்ப்பரேட்களிடம் இருந்து நிதி பெற்றால் சர்ச்சையில் சிக்கிக் கொள்ளும் சூழலும் உண்டு. ஆனால், கேரளத்தில் தங்களை கார்ப்பரேட் நிறுவனத்தின் கட்சி என்று அறிவித்து கொண்டே களத்துக்கு வந்திருக்கிறது ‘ட்வெஜ்டி 20’ கட்சி. ‘அன்னா கிடெக்ஸ் கார்மென்ட்ஸ்’ என்னும் கார்ப்பரேட் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் இருந்தே இந்தக் கட்சி நடத்தப்படுகிறது.
இந்த நிறுவனமானது ஜவுளி, அலுமினிய தயாரிப்பு என பல தொழில்களை செய்து வருகிறது. இந்நிறுவனஉரிமையாளர் சாபு எம்.ஜாக்கப்தான் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர். அதேநேரம் இவர்கள் திடீரென சட்டப்பேரவைத் தேர்தலுக்கு வந்துவிடவில்லை. கடந்த 2013-ம் ஆண்டில் இருந்தே எர்ணாக்குளம் மாவட்டத்தின் அரசியல், பொதுத்தளத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்து வருகின்றனர்.
ஜனநாயகம் தழைக்க முதலில் உள்ளாட்சியில் இருந்து மாற்றத்தை விதைக்க வேண்டும் என்பதுதான் ‘டிவென்டி 20’ அமைப்பினரின் கொள்கை. அந்த வகையில் கடந்த 2015-ல் எர்ணாக்குளம் மாவட்டத்தின் கிழக்கம்பலம் பஞ்சாயத்தில் மட்டும் தேர்தலை சந்தித்தது இந்தக் கட்சி. காங்கிரஸ் கட்சியின் வசம் இருந்த இந்த பஞ்சாயத்தை களம் கண்ட முதல் தேர்தலிலேயே கைப்பற்றியது டிவென்டி 20. அதிலும் கிழக்கம்பலத்தில் மொத்தமுள்ள 19 வார்டுகளில் 17 வார்டுகளைக் கைப்பற்றி மார்க்சிஸ்ட், காங்கிரஸ் என இரு கட்சிகளையும் அதிர வைத்தது. பஞ்சாயத்து தலைவர், வார்டு உறுப்பினருக்கு தங்கள் கார்ப்பரேட் நிதியில் இருந்து சம்பளமும் கொடுத்து புதுமை செய்தது இந்தக் கட்சி.
அண்மையில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கிழக்கம்பலத்தில் மொத்தமுள்ள 19 வார்டுகளில் 18 வார்டுகளைக் கைப்பற்றியது. அதற்கு காரணம்முந்தைய 5 ஆண்டுகளில் கிழக்கம்பலத்தில் பெருநகரங்களுக்கு இணையான வசதிகளை செய்துகொடுத்ததுதான். கூடவே எர்ணாக்குளம் மாவட்டத்தில் ஏக்கரநாடு, குன்னத்து நாடு பஞ்சாயத்துக்களையும் கைப்பற்றியது. அதுதந்த உற்சாகத்திலேயே சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது ட்வென்டி 20 கட்சி.
இணையும் பிரபலங்கள்
புதிதாக சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கும் ட்வென்டி 20 கட்சியில் மலையாளத்தில் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான சித்திக் இணைந்துள்ளார். சித்திக் தமிழிலும் விஜய், சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ், காவலன், அரவிந்த்சாமி நடித்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் ஆகிய படங்களை இயக்கி இருக்கிறார். இதேபோல் மலையாள நடிகர் சீனிவாசன், விகாட் நிறுவன உரிமையாளர் அவுசெப் சிட்டிலபள்ளி ஆகியோரும் இணைந்துள்ளனர்.
தற்போது கேரள முன்னாள் முதல்வர்உம்மன்சாண்டியின் மருமகன் வர்கீஸ்ஜார்ஜும் இந்தக் கட்சியில் இணைந்துள்ளார். வர்கீஸ், உம்மன்சாண்டியின் மூத்த மகள் மரியாவின் கணவர் ஆவார். கொச்சியில் நடந்த டிவென்டி 20 கட்சியின் ஆலோசனை குழு கூட்டத்தின் போது, அங்கு வந்த வர்க்கீஸ் தன்னை முறைப்படி கட்சியில் இணைத்துக்கொண்டார். இவர் கட்சியின் ஆலோசனை குழு உறுப்பினராகவும், இளைஞர் பிரிவின் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
கிழக்கம்பலம் பஞ்சாயத்தில் டிவென்டி 20 கட்சியினர் செய்திருக்கும் பணிகள்தான் வெளிநாட்டில் வேலைபார்த்து விட்டு தாயகம் திரும்பி இருக்கும் வர்க்கீஸை இந்தக் கட்சியில் சேர தூண்டியதாக தெரிவித்துள்ளார். இதேபோல் மலையாள நடிகர் லால், அவரது மருமகன் ஆலன் லால் ஆகியோரும் இந்தக் கட்சியில் இணைந்துள்ளனர். தொடர்ந்து பிரபலங்கள் டிவென்டி 20-யில் இணைந்து வருவது அரசியல் கட்சியினரை புருவம் உயர்த்த வைத்துள்ளது.
ஏறுமுகத்தில் உறுப்பினர்கள்
கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் ஜாக்கப் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு நடத்திய உறுப்பினர் சேர்க்கை முகாம்களில், 10 நாட்களில் மட்டும் ஒன்றே முக்கால் லட்சம் உறுப்பினர்கள் கட்சியில் இணைந்திருப்பதாக அறிவித்துள்ளார். எர்ணாக்குளம் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்பில் பெற்ற வெற்றியே எர்ணாக்குளம் மாவட்டத்தில் உள்ள எட்டு தொகுதிகளில் வேட்பாளர் அறிவிக்கும் நிலைக்கு டிவென்டி 20-ஐ உயர்த்தி உள்ளது. அதேபோல் எட்டு தொகுதிகளிலும் இதுவரை எந்த குற்றப் பின்னணியும் இல்லாத நன்கு கற்றவர்களை களம் இறக்கியிருக்கிறது இந்தக் கட்சி.
கேரள அரசியல் களமானது கடந்த40 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட், காங்கிரஸ்என இரு துருவங்களைச் சார்ந்தே உள்ளது. இப்போதுதான் கேரளத்தில் மெல்லபாஜக.வும் காலூன்ற முயற்சிக்கிறது. இப்படியான சூழலில்தான் டிவென்டி 20கட்சியும் நம்பிக்கையுடன் களத்தில் இறங்குகிறது. கேரளத்தில் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் இருக்கும் நிலையில் இந்தக் கட்சி, அமைப்புரீதியாக வலுவாக இருக்கும் எர்ணாக்குளம் மாவட்டத்தில் மட்டும் தனித்தே தேர்தலை சந்திக்கிறது.
கிழக்கம்பலம் ஊராட்சியில் வீடற்ற ஏழைகளுக்கு தனது சிஎஸ்ஆர் நிதியில் இருந்து, ‘காட்ஸ் வில்லா’ என்னும் பெயரில் வீடு கட்டிக் கொடுத்துள்ளது இந்தக் கட்சி. வெளிச் சந்தையை விட விலைக் குறைவாக பொருட்களை வழங்கும் பல்பொருள் அங்காடியையும் கிழக்கம்பலம் பஞ்சாயத்தில் செயல்படுத்தி உள்ளனர். கழிப்பிடம் இல்லாதவீடுகளை கண்டறிந்து இலவச கழிப்பிடம், தொழில் கடன் என கிழக்கம்பலத்தில் செய்த சாதனைகளே டிவென்டி 20-ஐ நோக்கி வெகுமக்களையும் திருப்பியிருக்கிறது.
ட்வென்டி 20 கட்சியை இன்று வெகுமக்கள் ஏற்றுக் கொண்டனர். ஆனால், அதன் தொடக்க காலம் அவ்வளவு எளிதானதாக இல்லை. கிடெக்ஸ் கார்மென்ட்ஸ் கிழக்கம்பலம் பகுதியில்தான் இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையின் கழிவுகள் கிழக்கம்பலம் பகுதியின் நீர்நிலைகளில் கலப்பதாகவும் அதனால் நீர்மாசு ஏற்படுவதாகவும் பெரிய அளவில் மக்கள் கொதித்தனர். அந்த கோபத்தைக் குறைக்க தங்கள் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் (சிஎஸ்ஆர்) இருந்து கிழக்கம்பலம் கிராமத்துக்கு ஏராளமான திட்டங்களை செய்தது இந்நிறுவனம்.
தொடர்ந்து அந்த கிராமத்தை பொருளாதார வளர்ச்சியடைய செய்ய ‘கிழக்கம்பலம் 2020’ உதயமானது. ஒருகட்டத்தில் கிழக்கம்பலம் வாசிகளின்மனதில் இடம்பிடித்த 2020, இப்போது பொதுத் தேர்தல் களத்திலும் வந்துள்ளது. தேர்தல் ஆணையம் இவர்களுக்கு பலாப்பழ சின்னத்தை ஒதுக்கியுள்ளது. டிவென்டி 20 வெற்றி பெறுகிறதோ இல்லையோ போட்டியிடும் எட்டு தொகுதிகளிலும் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் இடத்தில் முக்கிய பங்காற்றும் என்பதே இப்போதைய களநிலவரம். இவர்களது அரசியல் வருகை காங்கிரஸ், மார்க்சிஸ்ட் இருவரில் யாருடையவாக்குகளை சேதமாக்கும் என்பது தேர்தல் முடிவில்தான் தெரிய வரும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT