Last Updated : 23 Mar, 2021 08:12 PM

 

Published : 23 Mar 2021 08:12 PM
Last Updated : 23 Mar 2021 08:12 PM

அதிகரிக்கும் கரோனா பரவல்: மாநிலங்களுக்கு மத்திய உள்துறை புதிய வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

கோப்புப் படம்.

புதுடெல்லி

நாட்டில் பல மாநிலங்களில் மீண்டும் கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதை அடுத்து, மாநிலங்களுக்குப் புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

இதன்படி, ஆடி-பிசிஆர் பரிசோதனையை அதிகப்படுத்த வேண்டும், பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சையைத் துரிதப்படுத்த வேண்டும், குறிப்பிட்ட வயதினருக்குத் தடுப்பூசி போடுதலை வேகப்படுத்த வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.

நாட்டில் கரோனா வைரஸ் பரவல் கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. மகாராஷ்டிரா, கர்நாடகா, பஞ்சாப், டெல்லி,கேரளா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் மீண்டும் அதிகரித்து வருகிறது. தொடர்ந்து 4-வது நாளாக நாள்தோறும் 40 ஆயிரத்துக்கும் மேலாக கரோனாவில் புதிதாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பல்வேறு நகரங்களில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.

இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, புதிய வழிகாட்டி நெறிமுறைகளை மாநில அரசுகளுக்கு வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

  1. கரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, பாதிக்கப்பட்டவருக்கு ஆழ்ந்த பரிசோதனை செய்ய வேண்டும். அவரைத் தனிமைப்படுத்துதல் அல்லது சரியான நேரத்தில் விரைவாக உரிய சிகிச்சையை அளிக்க வேண்டும்.
  2. பரிசோதனையை அதிகப்படுத்துதல், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்தல், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் கண்டுபிடித்து அவர்களையும் தனிமைப்படுத்துதல் மற்றும் கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய பிரிவினருக்கு அதை வேகப்படுத்த வேண்டும்.
  3. கரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்பில் இருந்தவர்களை விரைவாகக் கண்டறிய வேண்டும். அவர்களைத் தனிமைப்படுத்திக் கண்காணிக்க வேண்டும்.
  4. கரோனாவில் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்களைக் கண்காணித்து, தனிமைப்படுத்தப்பட்ட பகுதியைக் கவனமாக மாவட்ட நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.
  5. கரோனா திரட்சி இருக்கும் பகுதிகளில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனையைத் தீவிரப்படுத்தி, 70 சதவீதம் அளவுக்கு உயர்த்த வேண்டும்.
  6. உள்ளூர் சூழலைக் கண்காணித்து, கரோனா பரவல் நிலைக்கு ஏற்ப உள்ளாட்சி நிர்வாகம், மாவட்ட நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதிக்கலாம். நகர அளவில் கட்டுப்பாடுகள், வார்டுகள் அளவில் கட்டுப்பாடுகள் தேவைக்கு ஏற்ப விதிக்கலாம்.
  7. மாநிலங்களுக்கு இடையேயும், மாநிலத்துக்குள்ளேயும் போக்குவரத்தில் தடை ஏதும் இல்லை. தனிநபர்கள் மாவட்டங்களுக்கு இடையேயும், மாநிலங்களுக்கு இடையேயும் பயணிக்கத் தடையில்லை. சரக்கு வாகனப் போக்குவரத்துக்கும் தடையில்லை.
  8. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மக்கள் கரோனா விதிகளைக் கட்டுப்பாட்டுடன் பின்பற்ற மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர், நகராட்சி நிர்வாகம் பொறுப்பாக இருந்து நடவடிக்கை எடுத்து, அதைக் கண்காணிக்க வேண்டும்.
  9. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியே இருக்கும் பள்ளிகள், ஹோட்டல்கள், உயர்கல்வி நிறுவனங்கள், மெட்ரோ ரயில், பயணிகள் ரயில் போக்குவரத்து, ஷாப்பிங் மால், திரையரங்குகள், பூங்காக்கள், யோகா மையம், ரெஸ்டாரன்ட், கண்காட்சிகள், கூட்டங்கள் நடத்தத் தடை ஏதும் இல்லை.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x