Published : 23 Mar 2021 05:15 PM
Last Updated : 23 Mar 2021 05:15 PM
குஜராத் முதல்வராக இருந்தபோதிலும், பிரதமராகப் பதவியேற்ற பின்பும், 21 ஆண்டுகள் பொதுச்சேவையில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் மக்கள் சேவையில் இருக்கிறேன் என்று பாஜக நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பாஜக எம்.பி.க்கள் பங்கேற்கும் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் டெல்லியில் இன்று நடந்தது. இதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், ஜெய் சங்கர், அர்ஜூன் ராம் மேக்வால் உள்ளிட்ட பல அமைச்சர்கள், எம்.பிக்கள் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டம் குறித்து மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் கூறுகையில், "இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், குஜராத் முதல்வராக இருந்த காலத்திலும், பிரதமராகப் பதவி ஏற்ற பின்னும் இதுவரை 21 ஆண்டுகள் மக்கள் சேவையில் ஒருநாள் கூட விடுப்பு எடுக்காமல் பணியாற்றுகிறேன். தேசத்துக்காகவும், மக்களுக்காகவும் எம்.பி.க்கள் உண்மையாகப் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
கரோனா வைரஸ் பரவல் காலத்தில் தேசம் செயலாற்றிய விதம் சிறப்பானது என நினைக்கிறேன் என்று பிரதமர் மோடி தெரிவித்தார். பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் செயல்பாடுகளையும், முயற்சிகளையும் ஒட்டுமொத்த உலகமே பாராட்டியது என மோடி தெரிவித்தார்.
பெருந்தொற்றுக் காலத்தில் இந்தியாவின் பணியை 110 நாடுகளின் தலைவர்கள் பாராட்டினார்கள். இந்தக் கடினமான காலகட்டத்தில் 130 கோடி இந்தியர்களும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து, பசியால் வாடியவர்களுக்கு உணவு கொடுத்து, ஆதரவு அளித்ததை வெகுவாகப் பாராட்டினார்.
நாடாளுமன்றத்தின் அனைத்துக் கூட்டங்களிலும் பாஜக எம்.பி.க்கள் தவறாது பங்கேற்க வேண்டும் என்று எம்.பி.க்களுக்கு பிரதமர் அறிவுரை வழங்கினார்" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT