Published : 23 Mar 2021 04:59 PM
Last Updated : 23 Mar 2021 04:59 PM
பஞ்சாப் மாநிலத்தில் 401 மாதிரிகளுக்கு நடத்தப்பட்ட பரிசோதனைகளில் 81% பேர் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. ஆதலால், தடுப்பூசியை அனைவருக்கும் பரவலாக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் அமரிந்தர் சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில வாரங்களாக நாட்டில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நாள்தோறும் அதிகரிக்கும் கரோனா தொற்றில் 60 சதவீதத்துக்கும் மேல் பஞ்சாப், மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்துதான் வருகிறது. பஞ்சாப் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க ஆளும் காங்கிரஸ் தலைமையிலான அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்நிலையில் பஞ்சாப்பில் இந்த மாதத் தொடக்கத்தில் 401 பேரின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் குறித்து மரபணு பரிசோதனை செய்ததில், அதில் 81 சதவீதம் பேருக்கு உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து முதல்வர் அமரிந்தர் சிங் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பஞ்சாப் மாநிலத்தில் கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருவதால், தகுதியுள்ள வயதினர் உடனடியாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளக் கேட்டுக்கொள்கிறேன். கரோனா தடுப்பூசி செலுத்தும் வயதினரையும் மத்திய அரசு பரவலாக்க வேண்டும்.
அதாவது தற்போது குறைந்தபட்சமாக 45 வயதுள்ள இணைநோய்கள் இருப்போருக்கு மட்டுமே கரோனா தடுப்பூசி போடப்படும் நிலையில் தடுப்பூசி செலுத்தப்படும் வயதைப் பரவலாக்க வேண்டும்.
ஏனென்றால், பஞ்சாப்பில் சமீபத்தில் 401 பேரின் மாதிரிகள் எடுக்கப்பட்டு, கடந்த 1-ம் தேதி முதல் 10-ம் தேதிவரை தேசிய பயோலாஜிக்கல் நிறுவனம், ஐஜிஐபி, எசிடிசி ஆகியவற்றுக்கு மரபணு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பரிசோதனையில் 81 சதவீதம் பேரின் மாதிரிகள் உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
ஆதலால், பிரதமர் மோடி தடுப்பூசி போடும் வயதினரைப் பரவலாக்க வேண்டும். அனைத்து வயதினருக்கும் தடுப்பூசி போடுவதற்கு அனுமதிக்க வேண்டும்" எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையே பஞ்சாப் மாநில கரோனா கட்டுப்பாட்டுக் குழுவின் தலைவர் மருத்துவர் கே.கே.தல்வாருடன், நேற்று முதல்வர் அமரிந்தர் சிங், மாநிலத்தின் கரோனா சூழல் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, சமீபத்தில் 400க்கும் மேற்பட்டோருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில், 81 சதவீதம் பேருக்கு உருமாற்றம் அடைந்த கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இது மிகவும் வீரியமானது, வேகமாகப் பரவக்கூடியது என்று எச்சரித்துள்ளார்.
இந்தக் கூட்டத்துக்குப் பின்புதான் முதல்வர் அமரிந்தர் சிங் இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளார். மேலும், பஞ்சாப்பில் தொடர்ந்து அதிகரித்து வரும் கரோனா பரவல் குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் தலைமையில் மருத்துவக் குழுவினர் வந்து ஆய்வுசெய்து சென்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT