Published : 23 Mar 2021 09:11 AM
Last Updated : 23 Mar 2021 09:11 AM
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சோபியான் மாவட்டத்தில் நடந்த என்கவுன்ட்டரின் போது, தீவிரவாத கும்பலுடன் கூட்டுச் சேர்ந்த தனது தந்தையை திரும்பிவருமாறு 4 வயது குழந்தை கெஞ்சிய வீடியோ வைரலாகி வருகிறது.
சோபியான் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயது இளைஞர் அக்யூப் அகமது மாலிக். இவர் மூன்று மாதங்களுக்கு முன்பு தான் தீவிரவாத கும்பலுடன் இணைந்தார்.
இந்நிலையில், நேற்று சோபியானில் தீவிரவாதிகளுடன் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அப்போது, தீடீரென களத்துக்கு அக்யூபின் மனைவியையும், அவர்களின் 4 வயது குழந்தையையும் பாதுகாப்புப் படையினர் அழைத்துவந்தனர்.
அங்கிருந்து ஒலிப்பெருக்கி மூலம் குழந்தை, அப்பா வெளியே வாருங்கள், அவர்கள் உங்களை ஒன்றும் செய்யமாட்டார்கள். நீங்கள் இல்லாமல் நான் தவிக்கிறேன் என்று கொஞ்சும் மொழியில் கெஞ்சுகிறார்.
கூடவே, அக்யூபின் மனைவியும் தீவிரவாதிகளுடனான சேர்க்கையைத் துறந்து வெளியே வருமாறு உருக்கமாக வேண்டுகிறார். தயவு செய்து வெளியே வாருங்கள். என்னுடன் நம் குழந்தைகள் இருவரும் வந்துள்ளனர். வெளியேவந்து போலீஸில் சரணடையுங்கள். இல்லாவிட்டால் என்னைக் கொன்றுவிடுங்கள் என வேண்டுகிறார்.
மனைவி, குழந்தையின் வேண்டுகோளை ஏற்று அக்யூப் மனம் இறங்கத் தயாராக இருந்தாலும் அவரை உடனிருந்த மற்ற தீவிரவாதிகள் அனுமதிக்கவில்லை. இதனால், ராணுவத் தாக்குதலில் அக்யூப் உள்பட மற்ற தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.
இது குறித்து மேஜர் ஜெனரல் ராஷிம் பாலி கூறுகையில், "முதலில் அக்யூபின் மனைவி வேண்டுகோள் விடுத்தார். பின்னர், அவருடைய குழந்தையைப் பேசவைத்தோம். அக்யூப் வெளியே வந்து சரணடைந்திருந்தால்,
எங்களால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும்" என்றார்.
அக்யூப் தீவிரவாத கும்பலுடன் இணைவதற்கு முன்னதாக வங்கி ஊழியராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT