Published : 22 Mar 2021 06:43 PM
Last Updated : 22 Mar 2021 06:43 PM
உத்தரப்பிரதேசத்தில் பிஏசி (Provintial Armed Constabulary) என்றழைக்கப்படும் சிறப்பு காவல் படைகளில் பெண்கள் மட்டுமே இடம்பெறும் மூன்று படைகள் அமைக்கப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை, அம்மாநில பாஜக ஆளும் முதல்வர் யோகி ஆதித்யநாத் ஒரு அரசு நிகழ்ச்சியில் வெளியிட்டார்.
உ.பி.யில் முதல்வராக யோகி அமர்ந்து இன்று ஐந்தாவது வருடம் துவங்குகிறது. இதனால், பாஜக ஆட்சியில் முதன்முறையாக நான்கு வருடங்கள் கடந்த முதல்வராக யோகி உள்ளார்.
தலைநகரான லக்னோ பகுதியை ஆண்ட படைத் தளபதியான ராணி அவந்தி பாய் லோதி என்பவரின் நினைவுநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர் யோகி, தம் மாநிலத்தில் பிஏசியின் பெண்கள் பட்டாலியன்கள் மூன்றை அமைக்கப் போவதாக அறிவித்துள்ளார்.
முதன்முறையாகப் பெண்கள் மட்டுமே இடம்பெறும் இம்மூன்று காவல் படைகள், சுதந்திரப் போர்வீரர்களான ராணி அவந்தி பாய் லோதி, உதா தேவி மற்றும் ஜல்காரி பாய் ஆகிய மூன்று பெண் வீரர்களின் பெயர்களில் அழைக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
இது குறித்து முதல்வர் யோகி பேசும்போது, ‘இவை, பதாயு, லக்னோ மற்றும் கோரக்பூரில் அமைக்கப்பட உள்ளன. இந்த மூன்று படைகளும் உபியில் பெண்களின் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படும்.’ எனத் தெரிவித்தார்.
பெண்கள் மீதான வழக்குகள் சமீபத்தில் உபியில் அதிகரித்ததாகப் புகார் எழுந்தது. அப்போது, ‘மிஷன் சக்தி’ எனும் பெயரில் மாநில முழுவதிலும் உள்ள காவல் நிலையங்களில் உபி அரசு பெண்கள் மீதான வழக்குகளை பதிவு செய்து விசாரணை செய்தது.
இதை தனது உரையில் நினைவுகூர்ந்த முதல்வர் யோகி பேசுகையில், ‘மிஷன் சக்தி அமல்படுத்திய போது அனைத்து விசாரணைக் குழுக்களிலும் குறைந்தது 20 சதவிகிதம் பெண் காவலர்கள் அமர்த்தப்பட்டனர். இதன்மூலம், பாதிக்கப்பட்டப் பெண்களுக்கு தமக்கு நியாயம் கிடைக்கும் என்ற நம்பிக்கை பிறந்தது.’ எனக் குறிப்பிட்டார்.
உபியில் கலவரங்களை ஒடுக்குவதற்காக என பிஏசி காவல் படைகள் துவங்கி செயல்படுகின்றன. இதன் பட்டாலியன்கள் உபியின் பெரும்பாலான மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளது/
இப்படைகளுடன் பெண்களுக்காக எனத் தனியாகவும் மூன்று பட்டாலியன்கள் அமைக்கப்படுவது வேறு மாநிலங்களில் இருப்பதாகத் தெரியவில்லை. இவை மத்திய பாதுகாப்பு படைகளில் ஏற்கெனவே அமர்த்தப்பட்டு செயல்படுகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT