Published : 22 Mar 2021 05:55 PM
Last Updated : 22 Mar 2021 05:55 PM

ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு காந்தி அமைதிப் பரிசு: மத்திய அரசு அறிவிப்பு

ஷேக் முஜிபுர் ரஹ்மான்

புதுடெல்லி

2020-ம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு வங்கதேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட பங்கபந்து என போற்றப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்கப்படுகிறது.

2019 மற்றும் 2020-ம் ஆண்டுகளுக்கான காந்தி அமைதிப் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

2019-ம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு காலஞ்சென்ற ஓமன் மன்னரான சுல்தான் கபூஸ் பின் சையித் அல் சையித்துக்கு வழங்கப்படுகிறதும்.

2020-ம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்கப்படுகிறது.

மகாத்மா காந்தியின் 125-வது பிறந்த தினத்தை குறிக்கும் விதமாக 1995-ம் ஆண்டு காந்தி அமைதிப் பரிசு இந்திய அரசால் தோற்றுவிக்கப்பட்டது.

நாடு, இனம், மொழி, சாதி, மதம் மற்றும் பாலினத்துக்கு அப்பாற்பட்டு தகுதியுடைய அனைவருக்கும் இவ்விருது வழங்கப்படும்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான காந்தி அமைதிப் பரிசுக்கான நீதிபதிகள் குழுவில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியும், மக்களவையின் தனிப் பெரும் எதிர்கட்சியின் தலைவரும் அலுவல் சாரா உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.

மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா மற்றும் சுலப் இன்டர்நேஷனல் சமூக சேவை அமைப்பின் நிறுவனர் பிந்தேஷ்வர் பதக் ஆகியோரும் இவ்விருதுக்கான நடுவர் குழுவின் உறுப்பினர்கள் ஆவர்.

2021 மார்ச் 19 அன்று கூடிய இக்குழு உரிய ஆலோசனைகளுக்கு பிறகு, 2019-ம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு காலஞ்சென்ற ஓமன் மன்னரான சுல்தான் கபூஸ் பின் சையித் அல் சையித்துக்கு வழங்கப்படும் என்றும் 2020-ம் ஆண்டுக்கான காந்தி அமைதிப் பரிசு பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானுக்கு வழங்கப்படும் என்றும் ஒருமனதாக முடிவெடுத்தது.

இவ்விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 1 கோடி பரிசுத் தொகை பாராட்டுப் பத்திரம், பட்டயம் மற்றும் பாரம்பரிய கைத்தறி அல்லது கைவினை பொருள் வழங்கப்படும்.

சுல்தான் கபூஸ் பின் சையித் அல் சையித் இந்தியாவின் உண்மையான நண்பர் என்றும், இந்தியா மற்றும் ஓமனுக்கு இடையேயான உறவுகள் பலப்பட பெரும் பங்காற்றியவர் என்றும் அவரது மறைவின் போது பிரதமர் நரேந்திர மோடி புகழாரம் சூட்டி இருந்தார்.

பங்கபந்துவை பற்றி குறிப்பிட்ட பிரதமர், மனித உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் போராளியாக அவர் திகழ்ந்ததாகவும், இந்திய மக்களுக்கும் ஒரு கதாநாயகனாக அவர் இருந்தார் என்றும் கூறினார்.

காந்தி அமைதிப் பரிசு இதற்கு முன்னர் பல்வேறு சர்வதேச மற்றும் இந்திய தலைவர்கள் மற்றும் அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x