Published : 22 Mar 2021 04:57 PM
Last Updated : 22 Mar 2021 04:57 PM

ரூ.100 கோடி மாமூல் புகார் குறித்து விசாரணை:  மகாராஷ்டிர அமைச்சருக்கு எதிராக மும்பை போலீஸ் அதிகாரி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

பரம் வீர் சிங்

மும்பை

மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அனில் தேஷ்முக், மும்பையில் உள்ள ஹோட் டல்கள், பார்களில் மாதந்தோறும் ரூ.100 கோடி மாமூல் வசூலிக்கச் சொன்னதாக புகார் கூறிய முன்னாள் மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில் அமைச்சர் அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து நியாயமான விசாரணை நடத்தவும், தமக்கு உரிய பாதுகாப்பு வழங்கவும் கோரியுள்ளார்.

மும்பையில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவன தலைவர் முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டுக்கு அருகே வெடிபொருட்கள் மற்றும் ஜெலட்டின் குச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த காரின் உரிமையாளரான மான்சுக் ஹிரன், தானே பகுதியில் உள்ள நீர்நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். ஹிரன் மரண வழக்கை தீவிரவாத தடுப்புப் பிரிவும் வெடிபொருள் நிரப்பிய கார் நிறுத்தப்பட்ட வழக்கை என்ஐஏ-வும் விசாரித்து வருகின்றன.

இதனிடையே, அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், ஹிரன் அந்தக் காரை நிறுத்திவிட்டு மற்றொரு காரில் தப்பிச் சென்றது தெரிந்தது. அந்த காரை சச்சின் வாஸ் பயன்படுத்தியதும் தெரியவந்தது.

இதையடுத்து, சச்சின் வாஸை என்ஐஏ அதிகாரிகள் கடந்த 13-ம் தேதி கைது செய்தனர். மேலும் காவலர் வினாயக் ஷிண்டே மற்றும் நரேஷ் தாரே ஆகிய இருவரும் ஹிரன் மரண வழக்கில் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் கடந்த 18-ம் தேதி ஊர்க்காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இந்தச் சூழ்நிலையில், பரம் வீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு ஒரு கடிதம் எழுதினார். 8 பக்கங்களைக் கொண்ட அதில், “மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், உதவி காவல் ஆய்வாளர் சச்சின் வாஸ் உள்ளிட்ட காவலர்களிடம் மாதந்தோறும் ரூ.100 கோடி வசூலிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

குறிப்பாக மும்பையில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் பார்களில் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை வசூலிக்குமாறு உத்தரவிட்டார். மேலும் முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக் கப்பட்ட விவகாரத்தில் என்னை பலிகடா ஆக்கிவிட்டார்கள்” என கூறப் பட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து, அமைச்சர் அனில் தேஷ்முக் உடனடியாக பதவி விலக வேண்டும் எனக்கோரி பாஜக வினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதேசபோலவே மகாராஷ்டிர அரசை கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என பாஜகவின் கூட்டணிக் கட்சியான இந்திய குடியரசுக் கட்சித் தலைவர் ராம்தாஸ் அத்வாலே வலியுறுத்தி வருகிறார். இதுபோல மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சித் தலைவரும் அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.

இந்தநிலையில் மகாராஷ்டிரா மாநில அமைச்சர் அனில் தேஷ்முக் மீது புகார் கூறிய மும்பை காவல் ஆணையர் பரம் வீர் சிங் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அவரது சார்பில் மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில் ‘‘அனில் தேஷ்முக் மீதான புகார் குறித்து நியாயமான விசாரணை நடத்த வேண்டும். மத்திய விசாரணைக்குழுவை வைத்து இந்த விசாரணையை நடத்த வேண்டும். மாநில அரசிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதால் எனக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். என்னை ஊர்காவல் படைக்கு மாற்றிய உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.’’ எனக் கோரியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x