Published : 22 Mar 2021 03:02 PM
Last Updated : 22 Mar 2021 03:02 PM
மகாராஷ்டிர அரசியலில் ரூ.100 கோடி விவகாரம் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், ஆளும் மகா விகாஸ் அகாதி அரசு மீது அவதூறு பரப்ப சதி செய்கிறார்கள் என்று மாநில அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் இடமாற்றம் செய்யப்படுவதற்கு முன்புவரை போலீஸ் ஆணையர் பரம் பிர் சிங் கடிதம் எழுதவில்லை. கடிதம் எழுதப்பட்ட நேரம்தான் கேள்விக்குள்ளாகிறது என்றும் நவாப் மாலிக் தெரிவித்துள்ளார்.
மும்பையில் ரிலையன்ஸ் நிறுவன அதிபர் முகேஷ் அம்பானியின் வீட்டுக்கு அருகே சந்தேகத்துக்கு இடமாக கார் ஒன்று கடந்த மாதம் நின்றது. அந்த காரை போலீஸார் சோதனை செய்ததில் அதில் வெடிகுண்டுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து காரின் உரிமையாளரைப் பிடிக்க போலீஸார் முயன்றபோது, உரிமையாளர் ஹிரன் மன்சுக் கடந்த 5-ம் தேதியன்று பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
இந்தச் சூழ்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின் பேரில், அம்பானி வீட்டு அருகே வெடிகுண்டு கார் சிக்கிய வழக்கை தேசிய புலனாய்வுப் பிரிவு விசாரித்து வருகிறது. கடந்த 13-ம் தேதியன்று மும்பை குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆய்வாளராகப் பணியாற்றி வந்த சச்சின் வாசேவை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்தனர்.
சச்சின் வாசே கைது செய்யப்பட்ட அடுத்த சில நாட்களில் மும்பையின் போலீஸ் ஆணையராக இருந்த வந்த பரம் பீர் சிங்கை மகாராஷ்டிர அரசு இடமாற்றம் செய்தது.
இந்நிலையில் மும்பையின் முன்னாள் காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் ஒன்றை எழுதி இருந்தார்.
அதில், "மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி சச்சின் வாசேவிடம் ஒவ்வொரு மாதமும் ரூ.100 கோடி வசூல் செய்து தன்னிடம் (தேஷ்முக்) கொடுக்கும்படி தெரிவித்தார் என்று அதில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது இது மகாராஷ்டிர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ள எதிர்க் கட்சியான பாஜக, உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் உடனடியாகப் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் அல்லது ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி புனே, மும்பை உள்ளிட்ட பல நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார், "உள்துறை அமைச்சர் மீது எழுந்துள்ள புகார் என்பதால், முதல்வர் உத்தவ் தாக்கரே உரிய முடிவு எடுப்பார். ஆனால், எழுப்பப்பட்ட நேரம்தான் சந்தேகத்தை எழுப்புகிறது என்பதால், தீவிர விசாரணை தேவை. மகாவிகாதி அரசை யாராலும் கவிழ்க்க முடியாது" எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மகாராஷ்டிர அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளருமான நவாப் மாலிக் கூறுகையில், "உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் பதவியை ராஜினாமா செய்யமாட்டார்.
விசாரணை முடிந்தபின்தான் அவர் பதவியை ராஜினாமா செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், முதல்வர் உத்தவ் தாக்கரே ஆகியோர்தான் தேஷ்முக் குறித்து முடிவு எடுப்பார்கள். பரம் பிர் சிங் கூறிய குற்றச்சாட்டுகள் தீவிரமானவை என்பதால் ஆழமான விசாரணை தேவை.
போலீஸ் ஆணையர் பரம் பிர் சிங் ஏன் இடமாற்றம் செய்யப்பட்ட பின்பு முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்குக் கடிதம் எழுதினார். அதற்கு முன்பாக எழுதியிருக்கலாமே? கடந்த பிப்ரவரி மாதம் தேஷ்முக்கை, போலீஸ் ஆய்வாளர் சச்சின் வேஸ் சந்தித்தார் என பரம் பிர் சிங் தெரிவித்துள்ளார்.
ஆனால், தேஷ்முக் கடந்த மாதம் 15-ம் தேதிவரை மருத்துவமனையில் இருந்தார். 27-ம் தேதிவரை வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். எவ்வாறு அவர் தேஷ்முக்கைச் சந்தித்து இருக்க முடியும்?
28-ம் தேதியிலிருந்துதான் தேஷ்முக் பொதுமக்களைச் சந்தித்தார். ஆதலால், இந்தக் கடிதத்தில் சந்தேகம் எழுகிறது. ஆளும் மகாவிகாஸ் அரசு மீது அவதூறு பரப்ப சதி நடக்கிறது" எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT