Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM
உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உள்ள உற்சவ மூர்த்திக்கு மலையப்பர் என்று பெயர். சப்த மலைகளில் இவர் உள்ளதால் இவருக்கு மலையப்பர் என பெயர் வந்தது எனக் கூறப்படுகிறது.
தேவி, பூதேவி சமேதமாய் உள்ள மலையப்பருக்கு காலை சுப்ரபாதம் தொடங்கி, இரவு ஏகாந்த சேவை வரை தினசரி ஆர்ஜித சேவைகள், மற்றும் வாரந்திர ஆர்ஜித சேவைகள் மற்றும் பிரம்மோற்சவம் உள்ளிட்ட வருடாந்திர ஆர்ஜித சேவைகள் நடக்கின்றன.
பல நூற்றாண்டுகளுக்கு முன் செய்யப்பட்ட இந்த உற்சவ மூர்த்தியின் சிலைக்கு ஆண்டுக்கு சுமார் 450 முறை அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால், தற்போது மலையப்பரின் சிலையில் தேய்மானம் ஏற்பட்டுள்ளது. ஆதலால், தேவி, பூதேவி சமேதமாக உள்ள மலையப்பரின் சிலைகளை பாதுகாக்க தேவஸ்தானம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
உற்சவரான தேவி, பூதேவி சமேத மலையப்பருக்கு தினமும் வசந்தோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை, கல்யாண உற்சவம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு முன் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடத்தப்படு கின்றன. மேலும், வாராந்திர சேவைகளிலும், பிரம்மோற்சவம், தெப்போற்சவம், ஆனிவார ஆஸ்தானம், வைகுண்ட ஏகாதசி போன்ற முக்கிய நாட்களிலும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகிறது.
450 முறை அபிஷேகம்
ஆண்டுக்கு 450 முறை உற்சவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. இதனால், பஞ்சலோக சிலையான மலையப்பர் சிலையில், சேதமும், தேய்மானமும் ஏற்பட தொடங்கி உள்ளது. இதனை கவனித்த அர்ச்சகர்கள், தேவஸ்தான அதிகாரிகளிடமும், ஜீயர்களிடமும், ஆகம வல்லுநர்களிடம் தகவல் தெரிவித்தனர். அதன்படி அனைவரும் சிலைகளை பரிசீலத்தனர்.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை கூட உற்சவ மூர்த்திக்கு சற்று குறைவாகவே திருமஞ்சனங்கள் நடத்தப்பட்டு வந்துள்ளன. ஆனால், சமீப காலகட்டத்தில்தான், உற்சவருக்கு ஆண்டுக்கு 450 முறை அபிஷேகம் செய்ய தொடங்கப்பட்டது. ஆதலால், பழையபடி முக்கிய நாட்களில் மட்டும் உற்சவ மூர்த்திகளுக்கு திருமஞ்சன சேவை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதாவது பிரம்மோற்சவ சமயத்தில் மட்டும் ஆண்டுக்கு ஒருமுறை அபிஷேகம் செய்ய ஆகம வல்லுநர்களும் ஒப்புதல் அளித்துள்ளனர். இது வரும் அறங்காவல் கூட்டத்தில் குழுவினர்முன் விவாதம் நடத்தி ஒப்புதல் பெறப்படும் என தேவஸ்தான அதிகாரி தகவல் தெரிவித் துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT