Last Updated : 21 Mar, 2021 03:14 AM

 

Published : 21 Mar 2021 03:14 AM
Last Updated : 21 Mar 2021 03:14 AM

எட்டு கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும்; மே.வங்க மாநிலத்தில் மும்முனை போட்டி: முதல்வர் மம்தா பானர்ஜிக்கு சிக்கல்- திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் தவிப்பு

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அங்குள்ள பூர்பா மெதின்பூரில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி. படம்: பிடிஐ

புதுடெல்லி

மேற்கு வங்க மாநிலத்தில் முஸ்லிம்கள் அதிகம் கொண்ட சுமார் 120 தொகுதிகளில் மும் முனைப்போட்டி நிலவுகிறது. இதனால் அங்கு 3-வது முறையாக ஆட்சி அமைக்க முயலும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவி மம்தா பானர்ஜிக்கு சிக்கல் எழுந்துள்ளது.

மேற்கு வங்க சட்டப்பேரவைக்கு வரும் 27-ம் தேதி முதல் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இங்குள்ள 294 தொகுதிகளில் சுமார் 125-ல் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதில் 46 தொகுதிகளில் சுமார் 50 சதவிகிதமும், 16 தொகுதிகளில் சுமார் 40 சதவிகிதமும் 33 தொகுதிகளில் 30 சதவிகிதமும் 50 தொகுதிகளில் 25 சதவிகிதமும் முஸ்லிம் வாக்காளர்களும் இடம் பெற்றுள்ளனர்.

இதன் பலனை கடந்த பத்து வருடங்களாக ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் பெற்றது. இக்கட்சிக்கு கடந்த சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் வாக்காளர்கள் அதிகம் உள்ள 90 தொகுதிகளில் வெற்றி கிடைத்தது. இந்தமுறை அதற்கு தடை ஏற்படும் விதத்தில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது.

இம்மாநிலத்தின் வாழும் சுமார் 30 சதவிகித முஸ்லிம்களின் முக்கியத் தலைவரான அப்பாஸ் சித்திக்கீ புதிய கட்சியை தொடங்கிஉள்ளார். இந்திய மதசார்பற்ற முன்னணி(ஐஎஸ்எப்) எனும் பெயரிலான அக்கட்சி, மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து கூட்டணி அமைத்துள்ளது. இதனால் முஸ்லிம் வாக்குகள் இக்கூட்டணிக்கு கணிசமாக கிடைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் பல தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர்.

ஹைதராபாத் எம்.பியான அசாதுத்தீன் ஒவைசியும் முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளார். இதன் காரணமாக, இவரது அகில இந்திய இத்தாஹுதுல் முஸ்லிமீன் கட்சிக்கும் முஸ்லிம் வாக்குகள் ஓரளவு பிரியும் எனக் கருதப்படுகிறது.

இதன் தாக்கமாக மம்தா கட்சியின் வேட்பாளர்களுக்கு இம்முறை வாக்குகள் கணிசமாக குறைந்து வெற்றியை பாதிக்கக்கூடும் என கருதப்படுகிறது. ஏனெனில், முஸ்லிம்கள் வாக்குகள் பிரிவதால் அங்கு போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு சாதகமான சூழல் உருவாகி வருகிறது.

கடந்த 2019 மக்களவை தேர்தலில் முஸ்லிம்கள் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்கும் பலதொகுதிகளில் பாஜகவின் வேட்பாளருக்கு வெற்றி கிடைத்திருந்தது. மால்டா மாவட்டத்தின் 2 தொகுதிகளில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றார். வேறு பல தொகுதிகளான ராஜ்கன்ச், வடக்கு தினாச்பூர் ஆகியவற்றிலும் பாஜகவிற்கு எம்.பிக்கள் கிடைத்தனர்.

மேலும், இந்த தேர்தலில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் தொகுதிகளில் அதன் உள்ளூர் முக்கிய தலைவர்கள் பலரும் பாஜகவில் இணைந்துள்ளனர். இதன் பலன் பாஜகவிற்கு கிடைக்கும் என எதிர்நோக்கப்படுவதால், மம்தா கட்சியின் வேட்பாளர்களின் வெற்றிக்கு அது சிக்கலாக மாறி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x