Published : 27 Nov 2015 01:22 PM
Last Updated : 27 Nov 2015 01:22 PM
மதரசாக்களை விமர்சித்து பதிவிட்ட பெண் பத்திரிகையாளர் வி.பி.ரஜீனாவின் ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் வி.பி.ரஜீனா இளமைப் பருவத்தில் மதரசாவில் தான் பயின்றது குறித்தும் அங்கிருந்த பயிற்றுனர்கள் சிலரின் நெறி தவறிய நடவடிக்கை குறித்தும் ஃபேஸ்புக்கில் விமர்சித்திருந்தார்.
இதனால், அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. அவரது ஃபேஸ்புக் பதிவுக்கு கண்டனம் தெரிவித்து நிறைய பேர் புகார் அளித்ததையடுத்து அவரது ஃபேஸ்புக் பக்கம் முடக்கப்பட்டது.
இருப்பினும் சிறிய போராட்டத்துக்குப் பின்னர் ரெஜீனா அவரது ஃபேஸ்புக் பக்கத்தை மீட்டெடுத்தார். ஆனால் மீண்டும் அவர் மீது புகார் வைக்கப்பட்டது. இரண்டாவது முறையாக ஃபேஸ்புக் அவரது பக்கத்தை முடக்கியுள்ளது.
இது குறித்து ரஜீனா கூறும்போது, "மதரசாக்கள் குறித்து நான் பதிவு செய்த கருத்துக்காக என் மீது அளவுக்கு அதிகமான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. மதரசாக்கள் மீது நான் குற்றம்சாட்ட பின்னணி என்ன என்று கேள்வி எழுப்பினர். சிலர் இது மதத்தின் மீதான தாக்குதல் என கண்டித்தனர்.
நான் அந்த பதிவில் எனது தனிப்பட்ட அனுபவங்களை மட்டுமே பகிர்ந்திருந்தேன், பொதுவாக எந்தக் கருத்தும் கூறவில்லை. இருந்தபோதும், சிலர் என் கருத்தை ஆமோதித்தனர். அவர்களும் இத்தகைய அனுபவங்களைப் பெற்றதாகக் கூறினர்" என்றார்.
மேலும் அவர் கூறும்போது, "இந்த கருத்தை நான் இப்போது பதிவு செய்ய காரணம் பரூக் கல்லூரி விவகாரமே. கேரளா மாநிலம் கோழிக்கூட்டில் 67 வருட பாரம்பரியத்தைக் கொண்டது பாரூக் கல்லூரி. இந்த கல்லூரியில், மாணவர்களும், மாணவிகளும் ஒரே இருக்கையில் ஒன்றாக அமர்ந்திருந்ததற்காக 9 பேர் வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
பின்னர் கல்லூரி வளாகத்திற்குள் அமர்ந்திருந்த அந்த 9 மாணவர்களை (4 மாணவிகள், 5 மாணவர்கள்) கண்டித்த அந்த கல்லூரி நிர்வாகம், பெற்றோர்களை அழைத்து வரும் வரை கல்லூரிக்குள் நுழைய தடை விதித்தது. இந்த சம்பவம் முஸ்லிம் பெண்கள் சந்தித்து வரும் பல்வேறு அநீதிகளில் ஒன்று.
தாங்கள் அனுபவிக்கும் துயரங்களை தங்கள் சமூகத்தினர் மத்தியில்கூட எழுப்பும் உரிமை இல்லாத சூழலிலேயே முஸ்லிம் பெண்கள் இன்னமும் வாழ்கின்றனர். இதன் காரணமாகவே நான் எனது கருத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்தேன். இத்தனை ஆண்டு காலமாக அடக்கிவைக்கப்பட்டிருந்த கோபம் அந்தப் பதிவில் வெளியானது இயல்பானதே" எனக் கூறியுள்ளார்.
"நான் பெண் என்பதாலேயே என் கருத்துகளை சகித்துக் கொள்ள முடியாமல் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். பெண்கள் குரல் மேலோங்குவதை அவர்கள் விரும்புவதில்லை. விமர்சனங்களை விடுத்து தங்கள் சமுதாய பெண்களுக்கு நீதி கிடைக்க அவர்கள் வழி காண வேண்டும்" என ரஜீனா அறிவுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT