Published : 20 Mar 2021 05:40 PM
Last Updated : 20 Mar 2021 05:40 PM
கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டால் எத்தனை மாதங்களுக்கு ஒருவருக்கு பாதுகாப்பு கிடைக்கும் என்பது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார்.
கரோனா வைரஸ் பரவல் முதல் அலை அடித்து ஓய்ந்துவிட்ட நிலையில், 2-வது அலை பல்வேறு மாநிலங்களில் உருவாகியுள்ளது. இதுவரை கரோனாவுக்கு 1.15 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1.59 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த இரு நாட்களாக 40 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளது பெரும் கவலையையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க இந்தியாவில் ஐசிஎம்ஆர், பாரத் பயோடெக் இணைந்து கோவாக்ஸின் தடுப்பு மருந்தையும், சீரம் நிறுவனமும், ஆக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜென்காவும் இணைந்து கோவிஷீல்ட் தடுப்பு மருந்தையும் கண்டுபிடித்துள்ளன.
இந்தத் தடுப்பு மருந்துகளை முதியோர்களும், 45 வயது முதல் 59 வயதுள்ள இணைநோய்கள் இருப்போரும் இலவசமாக செலுத்திக்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.
கரோனா தடுப்பு மருந்து செலுத்திக் கொண்டால் எத்தனை மாதங்களுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கும் என்பது குறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லியில் ஐபிஎஸ் அதிகாரிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா, நிதி ஆயோக் சுகாதார உறுப்பினர் வி.கே.பால் ஆகியோர் பங்கேற்றனர்.
அப்போது வி.கே.பால் பேசியதாவது:
''கரோனா பரவல் சங்கிலியை நாம் உடைப்பதற்கு தனிமைப்படுத்துதல், பரிசோதனையைத் தீவிரப்படுத்துதல் போன்று கரோனா தடுப்பூசியும் ஒரு கருவிதான். கரோனா வைரஸ் பரவல் முடிந்துவிட்டது. அதனால், கரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டியதில்லை என மக்கள் நினைத்து கவனக்குறைவாக இருந்ததே திடீரென கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புக்குக் காரணமாகும்.
கரோனா தடுப்பூசியை அனைத்து மக்களுக்கும் செலுத்தவே அரசு விரும்புகிறது. ஆனால், நமக்கு மிகவும் குறைவாகக் கிடைப்பதால், முன்னுரிமை அடிப்படையில் வயதினரைத் தேர்வு செய்து தடுப்பூசி செலுத்துகிறோம்.
ஒருவேளை நமக்கு கரோனா தடுப்பூசி அதிகமான அளவில் கிடைத்தால், ஒவ்வொருவருக்கும் தடுப்பூசி செலுத்த முடியும். குறைவான அளவே கிடைப்பதால்தான் அனைவருக்கும் செலுத்த முடியவில்லை. பெரும்பாலான நாடுகளில் முன்னுரிமை அளிக்கப்பட்ட வயதினருக்கு மேல் கரோனா தடுப்பூசி வழங்க முடியாமல் தடுமாறுகிறார்கள்.
அதிகமான உயிரிழப்பு என்பது, இணை நோய்கள் இருப்பவர்கள் மத்தியிலும், முதியோர் மத்தியில்தான் ஏற்படுகிறது. அதனால்தான் அவர்களுக்கு முன்னுரிமை அளிக்கறோம். இந்த வயதில் உள்ள மக்கள் யாரும் கரோனா தடுப்பூசி எடுத்துக் கொள்வதில் கண்டிப்பாக தயக்கம் காட்டக்கூடாது. மற்ற வயதினரை விட இவர்களுக்குத்தான் கரோனா தடுப்பூசி முக்கியம்”.
இவ்வாறு வி.கே.பால் தெரிவித்தார்.
எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா பேசியதாவது:
“திடீரென கரோனா வைரஸ் பரவல் அதிகரிக்கக் காரணம், மக்கள் கரோனா பரவல் முடிந்துவிட்டதாக நினைத்துவிட்டார்கள். கரோனா தடுப்பு விதிகளை யாரும் பின்பற்றவில்லை. உண்மையில் கரோனா பரவல் முடியவில்லை
கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்புக்குப் பல்வேறு காரணங்களைக் கூறலாம். முதன்மையானது, மக்கள் மனநிலையில் ஏற்பட்டுள்ள என்ன செய்துவிடப்போகிறது கரோனா எனும் மெத்தனப்போக்கான மனநிலைதான். இன்னும் சிறிது காலத்துக்கு அத்தியாவசியமற்ற பயணத்தை மக்கள் குறைத்துக்கொள்ள வேண்டும்.
தற்போது பயன்பாட்டில் உள்ள கரோனா தடுப்பூசிகளான கோவாக்ஸின், கோவிஷீல்டை ஒருவருக்குச் செலுத்தினால் குறைந்தபட்சம் 8 முதல் 10 மாதங்கள் உடலில் நல்ல பாதுகாப்பை வழங்கும். சில நேரங்களில் அதற்கு அதிகமான காலம் கூட வழங்கும்.
இரு தடுப்பூசிகளிலும் எந்தவிதமான மாறுபாடும் இல்லை. இரு தடுப்பூசிகளும் சமமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கக்கூடியவை. நமக்கு வாய்ப்பு கிடைக்கும்போது இந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொள்ள வேண்டும். இரு தடுப்பூசிகளும் தரமானவை, பாதுகாப்பானவை, நீண்ட காலத்துக்குப் பாதுகாப்பு அளிக்கக் கூடியவை''.
இவ்வாறு குலேரியா தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT