Last Updated : 20 Mar, 2021 04:09 PM

3  

Published : 20 Mar 2021 04:09 PM
Last Updated : 20 Mar 2021 04:09 PM

மேற்கு வங்கத்தின் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்துக்கும் மம்தா சுவராக இருக்கிறார்: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

காரக்பூர் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசிய காட்சி: படம் | ஏஎன்ஐ.

காரக்பூர்

கொள்ளையடித்தல், வன்முறை, மோசமான நிர்வாகம், ஊழல் ஆகியவைதான் மேற்கு வங்க அரசு. மாநிலத்தின் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்துக்கும் சுவராக மம்தா பானர்ஜி இருக்கிறார் என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. வரும் 27-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியும், பாஜகவும் தீவிரமாக இறங்கியுள்ளன. இரு கட்சிகளுக்கும்தான் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

காரக்பூர் தொகுதியில் பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அப்போது அவர் பேசியதாவது:

''மேற்கு வங்க மாநிலத்தின் ஒவ்வொரு வளர்ச்சித் திட்டத்துக்கும் மம்தா பானர்ஜி சுவர் போன்று தடையாக இருக்கிறார். நீங்கள் மம்தாவை நம்பினீர்கள். ஆனால், அவர் உங்களின் நம்பிக்கையைத் தகர்த்துவிட்டார்.

உங்கள் கனவுகளை அவர் சிதைக்கவில்லையா, உடைக்கவில்லையா? 20 வாக்குறுதிகள் பற்றி மம்தா பேசுகிறார். மம்தாவுக்கு 10 ஆண்டுகள் ஆள்வதற்கு மக்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். அவர் என்ன செய்தார், ஊழல், கொள்ளை, வன்முறை, தவறான நிர்வாகம் ஆகியவற்றைத்தான் செய்தார்.

கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவ வசதி, நீர்ப்பாசனத் திட்டம், புகார்களுக்கு நீதி கிடைக்கும் முறை ஆகியவை கொண்ட அரசு மாநிலத்துக்கு அவசியம். பழங்குடியினர், ஏழைகள், தொழிலாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் உரிமைகளைப் பறித்துவிட்டு, முஸ்லிம்கள் மீது தனது கரிசனத்தை மம்தா பொழிவார். மேற்கு வங்க வளர்ச்சியின் 10 ஆண்டுகளை மம்தா பறித்துவிட்டார்.

மேற்கு வங்கத்தின் கல்வி நிலை பரிதாபமாக இருக்கிறது. மம்தாவின் பள்ளியில் கற்பிக்கப்படும் பாடங்கள், கமிஷன் எடுத்தல், தந்திரங்கள், கூட்டம் சேருதல், தேவையானவர்களுக்கும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினருக்கும் வேலைவாய்ப்பளித்தல் என நடக்கிறது. மிகவும் பரிதாபமாகக் கல்வி நிலை இருக்கிறது.

கடந்த 35 ஆண்டுகளுக்குப் பின் புதிய கல்விக் கொள்கையை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. 21-வது நூற்றாண்டுக்கு ஏற்ப கல்வியில் சீர்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பிராந்திய மொழிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு அதன் மூலம் கல்வி கற்பிக்கப்படுகிறது.

ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை பொறியாளராக வேண்டாமா, மருத்துவராக வேண்டாமா? மொழி காரணமாக அனைவரும் பின்தங்கினர். ஆனால், மொழி தொடர்பான சீர்திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தால் அதை மம்தா எதிர்க்கிறார், நடைமுறைப்படுத்த மறுக்கிறார். மேற்கு வங்கத்தின் எதிர்காலத்தோடு மம்தாவை விளையாட அனுமதிக்கக் கூடாது''.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x