Published : 20 Mar 2021 11:41 AM
Last Updated : 20 Mar 2021 11:41 AM
மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராக மாநில அரசுகள் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றுவதில் எந்தத் தவறும் இல்லை. அந்தந்த மாநிலங்களின் கருத்துகளைத்தான் எடுத்துரைக்கிறார்கள் என்று உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
குடியுரிமைத் திருத்தச் சட்டம், வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான், கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்கள் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வந்ததற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுவை நேற்று விசாரித்தபோது இந்தக் கருத்தை உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
ராஜஸ்தானைச் சேர்ந்த 'சமதா அந்தோலன் சமிதி' எனும் தன்னார்வ அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்திருந்தது. அதில், “ராஜஸ்தான், கேரளா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநில அரசுகள், மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகச் சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்ற எந்த அதிகாரமும் இல்லை. மத்திய அரசின் சட்டங்கள் அனைத்தும் அரசியலமைப்பின் 7-வது அட்டவணைக்குள் வந்துவிடும். ஆதலால், இந்தத் தீர்மானங்களைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் சவுமியா சக்ரவர்த்தி ஆஜரானார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி கேரள சட்டப்பேரவை, குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராகத் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சமத்துவ உரிமைக்கு எதிராக இருக்கிறது. சிஏஏ சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இருந்தது. இதைப் பிரதானமாகக் கொண்டே இந்த மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
அப்போது வழக்கறிஞர் சவுமியா சக்ரவர்த்தி வாதிடுகையில், “மத்திய அரசின் சட்டங்களுக்கு எதிராகச் சில மாநில அரசுகள் சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானங்களை ரத்து செய்து அவை செல்லாது என அறிவிக்க வேண்டும். குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக கேரள அரசு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றியது. அந்தச் சட்டத்தை ரத்து செய்யவும் மத்திய அரசை வலியுறுத்தியது. ஒரு சட்டம் நல்லதா அல்லது மோசமானதா என கேரள அரசு கருத்து கூறக்கூடாது” எனத் தெரிவித்தார்.
அதற்குத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியது என்பது கேரள சட்டப்பேரவையின் கருத்து. மக்கள் சட்டத்துக்கு விரோதமாக நடக்க வேண்டும் என்று சட்டப்பேரவை கூறவில்லையே. சிஏஏ சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தைத் தானே வலியுறுத்தினார்கள். இது கருத்துதான். கருத்தைத்தான் சட்டப்பேரவை கூறியுள்ளது. அவர்கள் சட்டம் கொண்டுவரவில்லை.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக 60க்கும் மேற்பட்ட மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்றம் நிறைவேற்றிய ஒரு சட்டத்தை ரத்து செய்ய கேரள சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை எனக் கூறுகிறீர்கள். அப்படியென்றால், சட்டப்பேரவைக்கு தங்கள் கருத்துகளைக் கூற உரிமை இருக்கிறதுதானே” எனத் தெரிவித்தார்.
அதற்கு வழக்கறிஞர் சக்ரவர்த்தி, “கேரள மாநில நலனுக்குத் தொடர்பில்லாத ஒரு விஷயத்தில் சட்டப்பேரவை தீர்மானம் கொண்டுவரக்கூடாது என்று பேரவை விதிகள் தெளிவாக இருக்கின்றன” எனத் தெரிவித்தார்.
அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, “கேரள அரசு கொண்டு வந்த தீர்மானம் மாநில நலனைக் கருத்தில் வைத்து கொண்டுவரப்படவில்லை என எப்படிச் சொல்கிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பினார்.
இந்த விவகாரம் குறித்து விரிவான அறிக்கையை அடுத்த 4 வாரங்களில் தாக்கல் செய்ய வேண்டும் என்று மனுதாரரரின் வழக்கறிஞருக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT