Published : 20 Mar 2021 10:34 AM
Last Updated : 20 Mar 2021 10:34 AM
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 40,953 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 188 பேர் பலியாகினர்.
நாட்டில் கரோனா இரண்டாவது அலை ஏற்பட்டுவிட்டதாக அறிவிக்கும் அளவுக்கு அன்றாடம் கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்று முன் தினம் 40,000 ஐ நெருங்கிய கரோனா தொற்று நேற்று 40 ஆயிரத்தைக் கடந்துவிட்டது.
இது கடந்த 4 மாதங்களில் இல்லாத அளவிலான பாதிப்பு. கடைசியாக கடந்த நவம்பர் 29, 2020ல் ஏற்பட்டதே ஒரே நாளில் அதிக பாதிப்பாக இருந்தது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின் விவரம்:
நாடுமுழுவதும், கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 40,953 பேருக்குக் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுவரை மொத்தம் 1,15,55,284 கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் 1,11,07,332 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் 2,88,394 கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை, 23,24,31,517 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.
நேற்று ஒரே நாளில் மட்டும் 188 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பலனின்றி இறந்த நிலையில், இதுவரை மொத்தம் 1,59,558 பேர் கரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர்.
அதேவேளையில், நாடு முழுவதும் மொத்தம் 4 கோடியே 20 லட்சத்து 63 ஆயிரத்து 392 பேருக்குக் கரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு ஆகிய இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிரா, பஞ்சாப், கேரளா, கர்நாடகா, குஜராத் ஆகிய ஐந்து மாநிலங்களில் தான் தொடர்ந்து கரோனா பாதிப்பு மிகமிக அதிகமாக இருக்கிறது. இந்த மாநிலங்களில் மட்டுமே 80 சதவீதத்துக்கும் அதிகமான பாதிப்பு இருக்கிறது.
தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் கரோனா தொற்று அதிகமாக இருக்கிறது. நேற்று வெள்ளிக்கிழமை மகாராஷ்டிராவில் 25,681 பேருக்கு புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது. மும்பையில் மட்டுமே 3062 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது.
இந்நிலையில், பொது இடங்களில் முகக்கவசம் அணிதல், சமூக விலகலைக் கடைபிடித்தல் ஆகியவற்றில் மக்கள் அலட்சியம் காட்டாமல் இருக்க வேண்டும் என மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT