Published : 20 Mar 2021 08:38 AM
Last Updated : 20 Mar 2021 08:38 AM
கரோனா சிகிச்சையில் காயத்ரி மந்திரம் மற்றும் பிராணயாமம் மூச்சுப் பயிற்சி பலனளிக்குமா என்பது குறித்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனை ஆய்வு செய்கிறது.
இந்த ஆய்வுக்கு மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்திருக்கிறது. மேலும், இந்த ஆய்வை மேற்கொள்ள இந்திய மருத்துவக் கவுன்சிலில் முறைப்படி விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.
எப்படி நடக்கும் ஆய்வு?
ஆய்வு மேற்கொள்ளும் முறை குறித்து ரிஷிகேஷ் எய்ம்ஸ் நிர்வாகம் விரிவாக விளக்கியுள்ளது.
இந்த ஆய்வு தீவிர கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கு மேற்கொள்ளப்படாது. மிதமான பாதிப்பு கொண்டவர்கள் மத்தியில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
இதற்காக மிதமான அளவில் கரோனா பாதிக்கப்பட்ட 20 பேர் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படுவர். ஒரு குழுவினருக்கு வழக்கமான சிகிச்சையும், மற்றொரு பிரிவினருக்கு வழக்கமான சிகிச்சையுடன் 14 நாட்களுக்கு காயத்ரி மந்திரத்தை ஜபித்தலும், பிராணயாமம் மூச்சுப் பயிற்சி மேற்கொள்வதும் கற்றுத்தரப்படும். நோயாளிகளுக்கு இந்தப் பயிற்சியை அங்கீகரிக்கப்பட்ட யோகா பயிற்றுநர் கற்றுக்கொடுப்பார்.
பின்னர், சாதாரண சிகிச்சை மேற்கொண்டோரைவிட காயத்ரி மந்திரம், யோகா பயிற்சி செய்தோரின் உடல்நிலையில் ஏற்பட்டிருக்கும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு, அறிவியல் ரீதியாக அறிக்கை மேற்கொள்ளப்படும்.
இது குறித்து, எய்ம்ஸ் மருத்துவமனையில் நுரையீரல் மருத்துவத் துறை பேராசிரியர் மருத்துவர் ருச்சி துவா 'தி இந்து' ஆங்கில நாளிதழிடம் கூறும்போது, "காயத்ரி மந்திரம், பிராணயாமம் பயிற்சிகள் மேற்கொண்டோருக்கு உடல் சோர்வு குறைந்திருக்கிறதா? மனப்பதற்றம் நீங்கியிருக்கிறதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும். இந்த முயற்சியில் யோகா குறித்து ஆராய்ச்சி செய்வோரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சி ரியாக்டிவ் புரதம் மூலம் நுரையீரலில் உள்ள அழற்சி எவ்வாறு குறைகிறது என்பதை ஆய்வு செய்வோம். அடுத்த 2 முதல் 3 மாதங்களுக்கு இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்றார்.
மேலும், இந்த ஆராய்ச்சியை மேற்கொள்ள மத்திய அறிவியல், தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவிக்கு விண்ணப்பித்திருந்ததாகவும், ரூ.3 லட்சம் உதவி கிடைத்துள்ளதாகவும் கூறினார்.
இதற்கு முன்னதாகவும், நோய் எதிர்ப்பில் மாற்று மருத்துவத்தின் தாக்கம் குறித்த ஆராய்ச்சிகளுக்கு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை நிதியுதவி அளித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT