Published : 12 Nov 2015 08:59 AM
Last Updated : 12 Nov 2015 08:59 AM
ஆந்திர மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக 9 பேர் பலியாயினர். 6 பேர் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் இதுவரை 4 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
வடகிழக்கு பருவமழை தொடங் கியதையடுத்து, ஆந்திராவின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக பலத்த மழை காரணமாக, நெல்லூர், சித்தூர் மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான ஏரி, குளம் மற்றும் அணைகளும் நிரம்பி உள்ளன.
ஆந்திராவில் கன மழைக்கு இதுவரை 9 பேர் பலியாகி உள்ளனர். மேலும் நெல்லூர் மாவட்டத்தில் 6 பேர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். இதில் 4 பேரை பேரிடர் மீட்பு குழுவினர் நேற்று மீட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
நெல்லூர் மாவட்டத்தில் உள்ள காலங்கி, சுவர்ணமுகி, கண்டலேரு அணைகள்நிரம்பி வழிகின்றன. பலத்த காற்று காரணமாக, மரங்கள் வேரோடு சாய்ந்ததால், கடப்பா-வெங்கடகிரி சாலை மூடப்பட்டது.
நெல்லூரில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர் களுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் கிடைக்க மாநில அரசு ஏற்பாடு செய்துள்ளது.
சித்தூர் மாவட்டத்திலும் தொடர் மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக திருமலையில் உள்ள ஆகாச கங்கை அணை நிரம்பியது. மேலும் பல அணைகள் நிரம்பி வருகின்றன. கடப்பா மாவட்டத்தில் பிஞ்சா அணைக்கட்டு நிரம்பியதால் நேற்று 2 மதகுகள் திறந்து விடப்பட்டன. ராஜம்பேட்டையில் வெள்ளத்தில் சிக்கிய 12 பேர் மீட்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT