Published : 19 Mar 2021 04:46 PM
Last Updated : 19 Mar 2021 04:46 PM
பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதற்கு நான் மோடி அல்ல. பொய் சொல்லவும் மாட்டேன். நான் கூறிய 5 வாக்குறுதிகளை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி உறுதியளித்தார்.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல்கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் ஆளும் பாஜக கூட்டணியும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக இறங்கியுள்ளன.
அசாம் மாநிலத்துக்கு 2 நாட்கள் தேர்தல் பிரச்சாரத்துக்காக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வந்துள்ளார்.
திப்ருகார்க் நகரில் உள்ள லஹோவால் நகரில் உள்ள கல்லூரியில் மாணவர்களுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி இன்று உரையாடினார். அதன்பின் தேயிலைத் தோட்டத்துக்குச் சென்ற ராகுல் காந்தி, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் உரையாடினார்.
அப்போது அவர் பேசியதாவது:
''தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.365 ஊதியம் அளிப்பதாக பாஜக கூறியது. ஆனால், 167 ரூபாய்தான் வழங்கியது. நான் பொய்யான வாக்குறுதிகளை அளிக்கமாட்டேன். அவ்வாறு கூறுவதற்கு நான் மோடி அல்ல. நான் பொய் சொல்லவும் மாட்டேன். இன்று நான் 5 வாக்குறுதிகளை வழங்குகிறேன். தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ரூ.365 ஊதியம் தருவேன், குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக இருப்போம், 200 யூனிட் மின்சாரம் இலவசம், குடும்பப் பெண்களுக்கு ரூ.2 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படும். இந்த வாக்குறுதிகளை காங்கிரஸ் நிறைவேற்றும்.
பிரதமர் மோடி, தேர்தல் வரும் நேரத்தில் மட்டுமே அசாம் மாநிலத்துக்கு வருகிறார். வெள்ளம் வந்த நேரத்தில் இங்குள்ள மக்கள் மோடிக்கு ஏதும் கொடுக்க முடியாது. ஆனால், நீங்கள் அவருக்கு வாக்களிப்பீர்கள் என்பதால் இங்கு வருகிறார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசில் வேலையின்மை அதிகரித்துள்ளது. ஜனநாயகம் குறைந்துகொண்டே வருகிறது. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராடி வருகிறார்கள். குடியுரிமைத் திருத்தச் சட்டம் வரப்போகிறது. அசாம் மக்களிடம் சென்று நீங்கள் டெல்லி வருவதால், உங்கள் கலாச்சாரத்தை, மொழியை மறந்துவிடுங்கள் என்று நாம் கேட்க முடியாது. பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், மொழிகள் கொண்ட மக்கள்தான் தேசத்தை அமைத்துள்ளார்கள். நாக்பூரைச் சேர்ந்தவர்கள் நாட்டையே கட்டுப்படுத்தப் பார்க்கிறார்கள்.
இந்த நாட்டின் எதிர்காலமாக இருக்கும் மாணவர்கள் வெளிப்படையாகப் பிரதமரிடம் பேசமுடியாவிட்டால் எங்கோ, ஏதோ ஒரு இடத்தில் தவறு இருக்கிறது என அர்த்தம். மாணவர்கள் இல்லாமல் ஜனநாயகம் இல்லை. ஆர்வத்துடன் அவர்கள் அரசியலிலும் ஈடுபட வேண்டும் அசாம் சூறையாடப்படுவதாக உணரும்போது, போராட வேண்டும். போராட்டம் என்றால் கற்கள், கம்புகளைக் கொண்டு அல்ல, அன்பால் போராட வேண்டும். மாணவர்கள் இல்லாமல் எந்த ஜனநாயகமும் இல்லை.
காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால், அசாம் மாநிலத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைச் செயல்படுத்த விடமாட்டோம் என்பதை உறுதி செய்கிறேன். வெறுப்பைப் பயன்படுத்தி சமூகத்தில் பிளவை பாஜக உருவாக்குகிறது. எங்கு வேண்டுமானாலும் வெறுப்பை விதைக்கட்டும். காங்கிரஸ் கட்சி அங்கு அன்பையும் ஒற்றுமையையும் விதைக்கும்''.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT