Published : 19 Mar 2021 10:50 AM
Last Updated : 19 Mar 2021 10:50 AM

விதை முதல் விற்பனை வரை: வாழ்த்து அனுப்பிய விவசாயிக்கு கடிதம் எழுதிய பிரதமர் மோடி

புதுடெல்லி

விதை முதல் சந்தை வரை, விவசாயிகளின் ஒவ்வொரு பிரச்சினையையும் தீர்க்க தொடர் முயற்சிகளை எடுத்து வருகிறோம் என விவசாயி ஒருவருக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.

சமீபத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தின் நைனிடாலில் வசிக்கும் கீமானந்த் எனும் விவசாயியிடம் இருந்து நரேந்திர மோடி (நமோ) செயலி மூலம் பிரதமருக்கு வாழ்த்து செய்தி ஒன்று வந்திருந்தது.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதற்கும், அரசின் இதர முயற்சிகளுக்கும் கீமானந்த் வாழ்த்து தெரிவித்திருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து கீமானந்துக்கு பிரதமர் மோடி கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

“விவசாயம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மேம்படுத்துவதற்கும், நாட்டை வளர்ச்சியின் புதிய உயரங்களை எட்ட செய்வதற்கும் அரசு எடுத்து வரும் தொடர் முயற்சிகள் குறித்த தங்களது மதிப்புமிகுந்த கருத்துகளை பகிர்ந்ததற்கு நன்றி.

இத்தகைய தகவல்கள் நாட்டிற்கு தொடர்ந்து சேவை செய்ய உறுதி எடுத்துக்கொள்வதற்கான புதிய உற்சாகத்தை எனக்கு அளிக்கின்றன,” என்று தமது கடிதத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் வெற்றி குறித்து குறிப்பிட்ட பிரதமர், “நிச்சயமற்ற வானிலைத்தன்மை ஏற்படுத்தும் ஆபத்துகளை குறைத்து பாடுபட்டு உழைக்கும் விவசாயிகளின் பொருளாதார நலன்களை பாதுகாப்பதில் பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் தொடர்ந்து முக்கிய பங்கை ஆற்றுகிறது.

விவசாயிகளுக்கு தோழமையான இத்திட்டத்தின் பலன்களை கோடிக்கணக்கான விவசாயிகள் அனுபவித்து வருகிறார்கள்,” என்று கூறினார்.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலனுக்கான அரசின் உறுதி மிக்க நடவடிக்கைகள் குறித்து தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள பிரதமர், “விரிவான காப்பீடு மற்றும் வெளிப்படையான குறை தீர்க்கும் நடவடிக்கையின் மூலம், விவசாயிகளின் நலனுக்கான நமது உறுதியான முயற்சிகளின் உதாரணமாக பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டம் கடந்த ஐந்து ஆண்டுகளில் உருவெடுத்துள்ளது.

இன்றைக்கு, விதை முதல் சந்தை வரை, விவசாயிகளின் ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய பிரச்சினைகளை தீர்க்கவும், அவர்களது வளம் மற்றும் விவசாயத்தின் மேம்பாட்டை உறுதி செய்யவும் தொடர் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன,” என்று கூறியுள்ளார்.

நாட்டின் வளர்ச்சியில் மக்களின் பங்கு குறித்து தமது கடிதத்தில் பாராட்டு தெரிவித்துள்ள பிரதமர், “வலிமையான, வளமான மற்றும் தற்சார்பு மிக்க இந்தியாவை அனைத்துவித வளர்ச்சியுடன் கட்டமைக்க நாடு இன்றைக்கு வேகமாக முன்னேறி வருகிறது.

அனைத்து மக்களின் நம்பிக்கையால் உந்தப்பட்டு, தேசிய இலக்குகளை எட்ட நாடு உறுதி பூண்டுள்ளது. உலக அரங்கில் நமது நாட்டை புதிய உயரங்களை எட்ட செய்வதற்கான நமது முயற்சிகள் மேலும் தீவிரப்படுத்தப்படும் என்று நான் திடமாக நம்புகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமரின் தலைமையிலான மத்திய அரசு, மக்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நல திட்டங்களின் மூலம் தொடர்ந்து முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அவர் கூறியிருந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x