Published : 18 Mar 2021 04:15 PM
Last Updated : 18 Mar 2021 04:15 PM
காப்பீடு திருத்த மசோதாவை மாநிலங்களவையில் மத்திய அரசு இன்று அறிமுகப்படுத்தியது. எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்டதால், அவை ஒத்தி வைக்கப்பட்டது.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட் தாக்கலின்போது, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விடுத்த அறிவிப்பில், காப்பீடு துறையில் அந்நிய நிறுவனங்கள் முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படும் என அறிவித்தார்.
இதன்படி காப்பீடு துறையில் திருத்த மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்தார்.
ஆனால், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர் பேசுகையில், "பொதுமக்களின் வாழ்க்கையில் இந்த மசோதா பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். காப்பீடு மசோதாவில் செய்யப்படும் 3-வது திருத்தம் இதுவாகும். வாஜ்பாய் அரசில் காப்பீடு துறையில் அந்நிய முதலீடு 26 சதவீதம் அனுமதிக்கப்பட்டது, அதன்பின் 2015-ம் ஆண்டு 49 சதவீதமாக உயர்த்தப்பட்டு தற்போது 74 சதவீதமாக உயர்த்த முடிவு எடுத்துள்ளீர்கள். இந்த மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி விவாதிக்க வேண்டும். இந்த மசோதாவில் உள்ள குறைபாடுகள் களையப்பட வேண்டும்" எனத் தெரிவித்தார்.
அப்போது பாஜக எம்.பி. பூபேந்திர யாதவ் எழுந்து பேசுகையில், "இந்த மசோதா ஏற்கெனவே நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டுவிட்டது. தேர்வுக் குழுவுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. ஆய்வுக்கும் உட்படுத்தப்பட்டது. இப்போது ஏதாவது இடையூறு செய்தால், அது நாட்டின் வளர்ச்சியைத் தடுப்பதாகத்தான் அர்த்தம்" எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்ட எதிர்க்கட்சிகள் உரத்த குரலில் எதிர்ப்பு தெரிவித்து, அவையின் மையப்பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.
அப்போது அவையை நடத்திய துணைத் தலைவர் ஹரிவன்ஸ், "இந்த மசோதாவைத் தேர்வுக் குழுவுக்கு அனுப்பக் கோரி எந்தத் தீர்மானத்தையும் நீங்கள் தாக்கல் செய்யவில்லை. ஆதலால், விவாதம் தொடரும், அதன்பின் நீங்கள் மசோதா மீது வாக்களிக்கலாம்" எனத் தெரிவித்தார்.
ஆனால், எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூச்சலிட்டதால், அவை சிறிது நேரம் ஒத்தி வைக்கப்பட்டது.
அதன்பின் அவை பிற்பகல் 3 மணிக்கு மேல் மீண்டும் கூடியது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே எழுந்து பேசுகையில், "இது மக்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய முக்கியமான விவகாரம். ஆதலால், தயவுசெய்து இந்த மசோதாவைத் தேர்வுக்குழுவுக்கு அனுப்பி வைக்கக் கோருகிறேன்" எனத் தெரிவித்தார்.
அதற்கு அவையை நடத்திய துணைத் தலைவர் ஹரிவன்ஸ், "உங்களுக்குத் தெரியாததா, இந்த மசோதாவை தேர்வுக் குழுவுக்கு அனுப்ப வேண்டுமென்றால் தீர்மானத்தை முன்மொழிந்திருக்க வேண்டும். நீங்கள் செய்யவில்லையே. இப்போது இந்த மசோதா அவையின் சொத்து. இந்த மசோதாவின் தலையெழுத்தை அவைதான் விவாதத்தின் மூலம் முடிவெடுக்கும்" எனத் தெரிவித்தார்.
இதைக் கேட்டதும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மீண்டும் கோஷமிட்டு அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT