Last Updated : 18 Mar, 2021 12:03 PM

34  

Published : 18 Mar 2021 12:03 PM
Last Updated : 18 Mar 2021 12:03 PM

பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள்; திரிணமூலுக்கு ஆதரவளியுங்கள்: இடதுசாரி ஆதரவாளர்களிடம் மம்தா பானர்ஜி வேண்டுகோள்

திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி: கோப்புப் படம்.

கொல்கத்தா

மேற்கு வங்கத்தில் பாஜகவை ஆட்சிக்கு வரவிடாமல் தடுக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இடதுசாரி முன்னணி ஆதரவாளர்கள் வாக்களிக்க வேண்டும் என்று முதல்வர் மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் போராடி வருகிறது. அதே நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக கூட்டணி தீவிரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது. பாஜக, திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு இடையேதான் இந்தத் தேர்தலில் கடும் போட்டி நிலவுகிறது.

நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி கடந்த 10-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். பிரச்சாரத்துக்குச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி மம்தா பானர்ஜியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே தேர்தல் பிரச்சாரங்களில் மம்தா பானர்ஜி பங்கேற்று வருகிறார். திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை மம்தா பானர்ஜி நேற்று வெளியிட்டார்.

அப்போது மம்தா பானர்ஜி பேசியதாவது:

''பாஜகவுக்கு வாக்களிக்காதீர்கள் என்ற பிரச்சாரத்தை நாங்கள் முன்னெடுத்து வருகிறோம். இந்தப் பிரச்சாரத்துக்கு ஆதரவு அளித்துவரும் இடதுசாரி பிரிவில் உள்ள அனைத்து ஆதரவாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.

அதேநேரத்தில் நான் இங்கு ஒன்றைக் குறிப்பிட வேண்டும். மாநிலத்தில் மீண்டும் இடதுசாரிகள் ஆட்சிக்கு வரமுடியாது என்பதைப் புரிந்துகொண்டு உங்கள் வாக்குகளை மீண்டும் இடதுசாரிகளுக்கு அளித்து வீணாக்காமல், திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு அளிக்க வேண்டும்.

இடதுசாரிகளுக்கு நீங்கள் வாக்களித்தால் நிச்சயம் பாஜகவைத் தோற்கடிக்க முடியாது. திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால்தான் பாஜகவை வீழ்த்த முடியும். துரதிர்ஷ்டமாக வங்கத்தில் வெளி ஆட்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. அவர்களால் மாநிலத்தின் ஒற்றுமை மனநிலை சிதைக்கப்படுகிறது.

இந்த அச்சுறுத்தலில் இருந்து நாம் விடுபட வேண்டும். அனைத்துச் சமூகத்தில் உள்ள ஒவ்வொருவரின் அடிப்படை உரிமைகளையும் நாம் பாதுகாப்பேன் என நான் உறுதியளிக்கிறேன்".

இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல்வேறு மூத்த தலைவர்கள் சமீபத்தில் வெளிப்படையாகவே இடதுசாரித் தொண்டர்களிடமும், நிர்வாகிகளிடமும் பாஜக ஆட்சியில் அமர்வதைத் தடுக்க திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர். அதைத் தொடர்ந்து மம்தாவும் கோரியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x