Published : 17 Mar 2021 08:19 PM
Last Updated : 17 Mar 2021 08:19 PM
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் குறைந்தபட்ச நிதியுதவி, பட்டியலினத்தவர்கள், பழங்குடியினருக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரம் நிதியுதவி, மாணவர்களுக்கு ரூ.10 லட்சத்தில் கடன் அட்டை எனத் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி தேர்தல் அறிக்கையை இன்று வெளியிட்டார்.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டத் தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் 291 தொகுதிகளுக்கான வேட்பாளர்களைத் திரிணமூல் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
மாநிலத்தில் ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி தீவிரமாகப் போராடி வருகிறது, அதே நேரத்தில் ஆட்சியைக் கைப்பற்ற பாஜக கூட்டணி தீவிரமாகக் காய்களை நகர்த்தி வருகிறது.
நந்திகிராம் தொகுதியில் போட்டியிடும் மம்தா பானர்ஜி கடந்த 10-ம் தேதி வேட்புமனுத் தாக்கல் செய்தார். பிரச்சாரத்துக்குச் சென்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி மம்தா பானர்ஜியின் காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனால், சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே தேர்தல் பிரச்சாரங்களில் மம்தா பானர்ஜி பங்கேற்று வருகிறார்.
மம்தாவுக்கு ஏற்பட்ட காயம் காரணமாக 3 முறை திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுவது ஒத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை அந்தக் கட்சியின் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி இன்று கொல்கத்தாவில் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது:
''சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் மாநிலத்தில் வேலையின்மை சூழல் மாற்றப்பட்டு, ஆண்டுக்கு 5 லட்சம் பேருக்குப் புதிதாக வேலைவாய்ப்பு உருவாக்கித் தரப்படும். எங்கள் வாக்குறுதிகளை நாங்கள் 100 சதவீதம் நிறைவேற்றுவோம். 100 நாட்கள் வேலைத்திட்டத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தி, ஐ.நா.விடம் இருந்து விருது பெற்றுள்ளோம்.
மாநிலத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு நிதியுதவியாக ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது ரூ.10 ஆயிரமாக உயர்த்தித் தரப்படும். விவசாயிகளின் வருமானத்தை மூன்று மடங்காக்கி இருக்கிறோம். மாநிலத்தில் வறுமையை 40 சதவீதம் குறைத்திருக்கிறோம்.
மாநிலத்தில் ஏழைகள், விளிம்புநிலையில் இருக்கும் மக்களுக்கு ஆண்டுக்குக் குறைந்தபட்ச வருமானத்தை உறுதி செய்யும் திட்டத்தைக் கொண்டு வருவோம். இதன்படி, பொதுப்பிரிவினர் ஆண்டுக்கு ஒவ்வொரு குடும்பத்தினரும் ரூ.6 ஆயிரம் உதவித்தொகையும், பிற பிரிவினருக்கு ஆண்டுக்கு ரூ.12 ஆயிரமும் உதவித்தொகை வழங்கப்படும்.
இது தவிர புதிய திட்டத்தையும் கொண்டுவருகிறோம். இதன்படி மாநிலத்தில் உள்ள 1.6 கோடி குடும்பங்களில் உள்ள பெண்களுக்குக் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்கிறோம் இதன்படி, பொதுப்பிரிவில் உள்ள குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு மாதம் 500 ரூபாயும், எஸ்சி, எஸ்டி பிரிவில் உள்ள குடும்பங்களில் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.1000 நேரடியாக வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். பெண்களுக்கு வீடி தேடி ரேஷன் பொருட்கள் அரசு சார்பில் சப்ளை செய்யப்படும்.
உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்காகக் கடன் அட்டை திட்டம் அறிமுகம் செய்ய உள்ளோம். இதன்படி ரூ.10 லட்சத்தில் கடன் அட்டை மாணவர்களுக்காக அறிமுகம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் கடன் பெற்றுப் பயிலும் மாணவர்களுக்கு 4 சதவீதம் மட்டுமே வட்டி வசூலிக்கப்படும்''.
இவ்வாறு மம்தா பானர்ஜி தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT