Published : 17 Mar 2021 07:31 PM
Last Updated : 17 Mar 2021 07:31 PM
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தடுப்பு மருந்து வீணாதல் விகிதம் 10% எனுமளவுக்கு இருப்பதை குறிப்பிட்ட பிரதமர் மோடி தடுப்பு மருந்து வீணாவதை தடுப்பதற்காக உள்ளூர் அளவில் உள்ள குறைகளை உடனடியாக சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
கோவிட்-19 நிலைமை குறித்து பல்வேறு மாநிலங்களின் முதல் அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் இன்று உரையாடினார்.
கோவிட்டுக்கு எதிரான போரில் பிரதமரின் தலைமை குறித்து முதல்வர்கள் பாராட்டு தெரிவித்தனர். நாடு முழுவதும் தடுப்பு மருந்து வழங்குதல் நடவடிக்கையை சிறப்பாக செயல்படுத்துவதற்காகவும், தடுப்பூசி வழங்கலை மேலும் விரிவு படுத்துவதற்கான ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் பிரதமருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.
சில மாநிலங்களில் பாதிப்புகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில், சரியான கோவிட் நடத்தை விதிமுறைகளை மக்களிடையே உறுதி செய்வதில் உள்ள சவால்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
நிலைமையை கட்டுப்படுத்த அதிக கண்காணிப்பு தேவை என்று முதல்வர்கள் ஒப்புக்கொண்டனர். கோவிட் பரவலை கட்டுப்படுத்துவதற்காக முதல்வர்கள் கவனம் செலுத்த வேண்டிய மாவட்டங்கள் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் எடுத்துரைத்தார்.
நாட்டின் தற்போதைய கோவிட் நிலைமை மற்றும் தடுப்பு மருந்து திட்டம் குறித்து மத்திய சுகாதார செயலாளர் செயல்விளக்கம் அளித்தார்.
முதல்வர்களிடையே உரையாற்றிய பிரதமர், 96 சதவீதத்துக்கும் அதிகமான தொற்றாளிகள் இந்தியாவில் குணமடைந்துள்ளதாகவும், உலகத்திலேயே மிகவும் குறைவான இறப்பு விகிதம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் கூறினார்.
மகாராஷ்டிரா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் அதிகரித்து வரும் பாதிப்புகள் குறித்து அவர் கவலை தெரிவித்தார். கடந்த சில வாரங்களில் நாட்டில் உள்ள 70 மாவட்டங்களில் 150% எனுமளவுக்கு பாதிப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. இந்த "இரண்டாவது அதிகரிப்பை" உடனடியாக தடுக்குமாறு வலியுறுத்திய அவர், நாம் இதை இப்போது தடுக்கவில்லை என்றால் நாடு முழுவதும் பெருந்தொற்று பரவிவிடும் என்றார்.
கரோனாவின் இந்த "இரண்டாவது அதிகரிப்பை" தடுப்பதற்காக விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கைகள் தேவை என்று பிரதமர் கூறினார். உள்ளாட்சியில் உள்ள பிரச்சினைகளை தடுப்பதற்கான முக்கியத்துவம் குறித்து அவர் பேசினார். கரோனாவுக்கு எதிரான நமது போரின் சாதனைகளில் இருந்து கிடைத்துள்ள நம்பிக்கை கவனக்குறைவாக மாறிவிடக்கூடாது என்று அவர் கூறினார்.
மக்களை பயப்படுத்தக்கூடாது என்றும் அதேசமயம் சிக்கலில் இருந்து அவர்களை விடுவிக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். நமது கடந்தகால அனுபவங்கள் மற்றும் நமது முயற்சிகள் ஆகியவற்றை பயன்படுத்தி திட்டங்களை வகுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
சிறிய கட்டுப்பாட்டுப் பகுதிகளின் தேவை குறித்து பேசிய பிரதமர், கடந்த ஒரு வருடமாக நாம் செயல்படுத்தி வரும் 'பரிசோதனை, கண்காணிப்பு மற்றும் சிகிச்சை' ஆகியவை குறித்து மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்.
பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரின் தொடர்பில் இருந்தவர்களையும் விரைந்து கண்டறிவது மிகவும் முக்கியம் என்று கூறிய அவர், ஆர்டி-பிசிஆர் பரிசோதனை விகிதத்தை 70 சதவீதத்துக்கும் அதிகமாக வைத்திருக்குமாறு கூறினார்.
துரித ஆன்டிஜன் பரிசோதனைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் மாநிலங்களான கேரளா, ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் உத்தரப் பிரதேசத்தில் அதிக அளவில் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.
பரிசோதனைகளை அதிகரிக்குமாறும், பரிந்துரை முறை மற்றும் அவசர ஊர்தி அமைப்பு ஆகியவற்றின் மீது சிறு நகரங்களில் சிறப்பு கவனம் செலுத்துமாறும் பிரதமர் கேட்டுக்கொண்டார்.
ஏனென்றால், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தற்போது பயணங்கள் நடைபெறுவதாகவும் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
ஒருவருக்கொருவர் தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கான புதிய முறைக்கான தேவை குறித்தும் அவர் வலியுறுத்தினார்.
அதேபோன்று, வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணிப்பதற்கான நிலையான செயல்பாட்டு வழிமுறைகளை பின்பற்றுவதற்கான பொறுப்பும் அதிகரித்துள்ளது.
புதிய வகை கரோனா வைரஸ் மற்றும் அதன் பாதிப்புகள் குறித்து கண்டறிந்து மதிப்பிட வேண்டும் என்றும் பிரதமர் கூறினார்.
அதிகரித்து வரும் தடுப்பு மருந்து வழங்குதல் நடவடிக்கைகளை பாராட்டிய அவர், ஒரே நாளில் 30 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் போடப்பட்டன என்று சுட்டிக்காட்டினார். அதே சமயம், தடுப்பு மருந்து வீணாவதை தடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
தெலங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தடுப்புமருந்து வீணாதல் விகிதம் 10% எனுமளவுக்கு இருப்பதை அவர் குறிப்பிட்டார். தடுப்பு மருந்து வீணாவதை தடுப்பதற்காக உள்ளூர் அளவில் உள்ள குறைகளை உடனடியாக சரி செய்யுமாறு பிரதமர் கேட்டுக்கொண்டார்.
மேற்கண்ட நடவடிக்கைகளோடு, முகக் கவசம் அணிதல், தனிநபர் இடைவெளியை உறுதி செய்தல் மற்றும் தூய்மையுடன் இருத்தல் ஆகிய அடிப்படை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு தொற்று பரவலை தடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இது போன்றவற்றில் மந்த நிலை இருக்கக்கூடாது என்றும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் வலியுறுத்தினார்.
தடுப்பு மருந்து வழங்கும் மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும், தடுப்பு மருந்து காலாவதி தேதி குறித்து கவனத்துடன் இருக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டார். மருந்துகளின் உதவியோடு நாம் கவனத்துடன் இருக்கவண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT