Last Updated : 14 Nov, 2015 11:09 AM

 

Published : 14 Nov 2015 11:09 AM
Last Updated : 14 Nov 2015 11:09 AM

பிஹார் தேர்தல் முடிவுகளால் மேற்கு வங்க அரசியலில் திருப்பம்: மெகா கூட்டணியில் சேருகிறார் மம்தா பானர்ஜி?

பிஹார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகளுக்கு பின் மேற்கு வங்க அரசியலில் மாற்றம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. அங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி, மெகா கூட்டணியில் சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிஹார் தேர்தலில் நிதிஷின் ஐக்கிய ஜனதா தளம், லாலுவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் இணைந்து அமைத்த மெகா கூட்டணி மாபெரும் வெற்றி கண்டது.

பிஹாரை அடுத்து மேற்கு வங்க மாநிலம் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க வுள்ள நிலையில், இங்கு ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி, தற்போது மெகா கூட்டணியில் இணைய விரும்புவதாக கூறப்படுகிறது.

இதற்கு ஆதாரமாக, பிஹார் தேர்தலுக்கு பின் மம்தாவின் செயல் பாட்டில் நிகழ்ந்து வரும் சில மாற்றங் கள் சுட்டிக் காட்டப்படுகின்றன.

நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் இருந்து மம்தாவுக்கு வாழ்த்து குறுந்தகவல் சென்றுள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த மம்தா, அதற்கு உடனடியாக நன்றியும் பதில் வாழ்த்தும் அளித் துள்ளார். அடுத்து பிஹாரில் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக பதவி யேற்கும் விழாவுக்கு மம்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு கண்டிப்பாக வருவதாக நிதிஷிடம் உறுதி அளித்துள்ளார் மம்தா. வழக்கமாக காங்கிரஸ் தலைவர்களுடன் மம்தா பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதில்லை.

மேற்கு வங்கத்தில் தொடர்ந்து 34 ஆண்டுகள் ஆளும் கட்சியாக இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிடம் இருந்து ஆட்சியை பறித்து முதல்வர் ஆனார் மம்தா. இவரது தாய் கட்சியான காங்கிரஸ் கட்சியும் இங்கு எதிர்க்கட்சியாகவே உள்ளது.

இதனிடையே பாஜக கடந்த மக்களவைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் முதல்முறையாக 2 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்நிலையில் அடுத்த ஆண்டு வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் இங்கு ஆட்சியை பிடிக்க முயன்று வருகிறது.

இதனால் திரிணமூல், மார்க்சிஸ்ட், காங்கிரஸ், பாஜக என நான்குமுனைப் போட்டி ஏற்படுமானால் அது மம்தாவுக்கு ஆபத்தாக அமைந்துவிடும் என்று கூறப்படுகிறது. எனவே இதை தவிர்க்கும் வகையில் காங்கிரஸுடன் கூட்டணி சேர மம்தா விரும்புவதாக கருதப்படுகிறது.

இது குறித்து காங்கிரஸ் தேசிய நிர்வாகி ஒருவர் `தி இந்து’விடம் கூறும்போது, “மேற்கு வங்கத்தில் கூட்டணி அமைப்பது தொடர்பாக எங்கள் கட்சியின் மாநிலத் தலைவர்களிடம் இருவேறு கருத்து நிலவுகிறது. ஒரு தரப்பினர் மார்க்சிஸ்ட் அணியுடனும் மற்றொரு தரப்பினர் திரிணமூல் காங்கிரஸுடனும் கூட்டு சேர விரும்புகின்றனர். எனவே தேசிய அளவில் பயனளிக்கும் வகையிலான ஒரு முடிவை கட்சித் தலைமை எடுக்கும்” என்றார்.

மக்களவையில் 34 உறுப்பினர்களை கொண்டிருக்கும் மம்தா, பல நேரங்களில் பாஜகவுக்கு சாதகமாகவே முடிவு எடுத்து வருகிறார். மத்திய அரசை எதிர்த்து காங்கிரஸ் தலைமையில் போராடும் எதிர்க்கட்சிகளுடன் மம்தா சேருவதில்லை.

எனினும், தனித்து போராட்டம் நடத்தி வருகிறார். இந்தநிலையில் காங்கிரஸுடன் மம்தா இணைவதால் பாஜகவுக்கு எதிராக நாடாளுமன்றத்திலும் ஒரு வலுவான எதிர்ப்பு உருவாகி விடும். இது தொடர்பாக பாட்னாவில் நடைபெறவிருக்கும் நிதிஷின் பதவியேற்பு விழாவில் ஆலோசனை நடத்த அதிக வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x