Last Updated : 17 Mar, 2021 09:56 AM

3  

Published : 17 Mar 2021 09:56 AM
Last Updated : 17 Mar 2021 09:56 AM

சதாம் உசேனும், கடாஃபியும்கூட தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்தான்: ராகுல் காந்தி

"ஈராக்கில் சதாம் உசேனும், லிபியாவில் கடாஃபியும்கூட தேர்தலில் வெற்றி பெற்றவர்கள்தான்; ஆனால் அவர்கள் பெற்ற வாக்குகளைப் பாதுகாக்க அங்கே ஓர் அமைப்பு இல்லை" என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசியிருக்கிறார்.

பிரவுன் பல்கலைக்கழக பேராசிரியர் அசுதோஷ் வர்ஷ்னேவுடன் நடந்த ஆன்லைன் கலந்துரையாடலில் அவர் இவ்வாறு பேசியிருக்கிறார்.

ஸ்வீடனைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஃப்ரீடம் ஹவுஸ் என்ற அமைப்பு இந்தியாவை சுதந்திர தேசம் என்ற தரத்திலிருந்து மக்களால் தேர்வு செய்யப்பட்ட சர்வாதிகார தேசம் என்ற நிலைக்கு இறங்கியுள்ளதாக குறிப்பிட்டிருந்ததை சுட்டிக் காட்டி எழுப்பப்பட்ட கேள்விக்கு ராகுல் இவ்வாறு கூறினார்.

இதுஒருபுறம் இருக்க, ஃப்ரீடம் ஹவுஸ் கணிப்பை இந்திய அரசு மறுத்துப் புறம்தள்ளியது. இது தவறான தகவல் என்றும் சாடியுள்ளது.

கலந்துரையாடல் நிகழ்ச்சியில் ராகுல் மேலும் பேசியதாவது:

தேர்தல் என்பது மக்கள் வாக்குச்சாவடிக்குள் சென்று வாக்குப்பதிவு இயந்திரத்தில் ஏதோ ஒரு பொத்தானை அழுத்திவிட்டு வெளியே வரும் செயல் அல்ல. தேர்தல் என்பது தேசத்தின் அமைப்புகள் சீராக இயங்குகின்றன என்பது உணர்த்துவது, தேர்தல் என்பது நாட்டில் நீதித்துறை நியாயமாக இருக்கிறது என்பதையும், நாடாளுமன்றத்தில் சுதந்திரமான விவாதங்கள் நடைபெறுகின்றன என்பதற்குமான சான்று.

இந்தியாவில் ஜனநாயகத்தின் நிலைமை மோசகமாகத் தான் இருக்கிறது. அதைப்பற்றி யாரும் அடையாளப்படுத்தத் தேவையில்லை என்றளவிலேயே மோசமாக இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் என்னைப் பேசவிடாமல் மைக் அணைத்துவைக்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

காங்கிரஸிலிருந்து விலகியிருக்க ராகுலுக்கு வைக்கப்படும் அழுத்தம் குறித்த கேள்விக்கு, "நான் ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தைப் பேணிப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறேன். யாரோ சிலருக்குப் பிடிக்கவில்லை என்பதால் அதை நான் கைவிட்டுவிட முடியாது. நான் தொடர்ந்து ஆர்எஸ்எஸ் கொள்கையை எதிர்த்துக் கொண்டேதான் இருப்பேன்.

நான் சில யோசனைகளை நம்புகிறேன். அதை முன்னெடுக்கிறேன், தூக்கிப் பிடிக்கிறேன். அந்தக் கொள்கையை ஆதரிக்கும்போது என் பெயர் என்ன? எனது தாத்தா யார் என்றெல்லாம் நான் திரும்பிப்பார்க்கவில்லை. யார் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அதை நான் தொடர்வேன்.
1989க்குப் பின்னர் எங்கள் குடும்பத்தைச் சேர்ந்த யாருமே பிரதமராக இருந்ததில்லை. ஆனாலும், நாங்கள் அதிகாரம் செய்வதாக ஓர் எண்ணம் நிலவுகிறது.

காங்கிரஸ் கட்சிக்குள் ஜனநாயகம் நிலவுகிறது. பாஜக, பகுஜன் சமாஜ் என அந்தக் கட்சியிலும் தேர்தல் இல்லை. ஆனால், காங்கிரஸில் தேர்தல் உள்ளது. காங்கிரஸைத் தவிர வேறு எந்தக் கட்சிக்குள்ளும் இப்போது இருக்கும் ஜி 23 போன்ற குழு இல்லை" என்று பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x