Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM
ஷியா பிரிவு முஸ்லிம் தலைவரான வசீம் ரிஜ்வீ, குர்ஆனின் 26 வசனங்களை நீக்க உச்ச நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இதற்காக, அவரது தலையை கொய்பவருக்கு ரூ.11 லட்சம் பரிசுஅறிவித்தவர் மீது உத்தரபிரதேசத்தில் வழக்கு பதிவு செய்யப்பட் டுள்ளது.
குர்ஆனின் இந்த வசனங்கள் முஸ்லிம்கள் இடையே ஜிஹாத் மற்றும் தீவிரவாதத்தை வளர்ப்பதாக ஷியா மத்திய வக்ஃபு வாரியத்தின் முன்னாள் தலைவரான ரிஜ்வீ தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இதனால் வசீம்ரிஜ்வீக்கு முஸ்லிம்கள் இடையேகடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதையொட்டி உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டமும் நடத்தி வருகின்றனர். இவர்களில் சிலர் பரேலி, ஆக்ரா உள்ளிட்ட நகரக் காவல் நிலையங்களில் ரிஜ்வீ மீது புகார் தெரிவித்துள்ளனர். இதில், குர்ஆன் மீது பொதுநல வழக்கு தொடுக்க மனு அளித்ததன் மூலம் ரிஜ்வீ, மதநல்லிணக்கத்தை குலைக்க முயல்வதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இதனிடையே, வசீம் ரிஜ்வீயின் தலையை கொய்து வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசு தருவதாக கடந்த 13-ம் தேதி அமீருல் ஹசன் ஜாப்ரி என்பவர் அறிவித்துள்ளார். இதுதொடர்பான வீடியோ பதிவு சமூகவலைதளங்களில் வைரலானது. அமீருல் ஹசன், உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் ஆவார். இந்நிலையில், அமீருல் ஹசன் மீது மொராதாபாத் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இவ்வழக்கு அவரது அறிவிப்பிற்காக ஐபிசி 506, 502(2) ஆகிய பிரிவுகளின்படி பதிவாகி உள்ளது.
இது குறித்து மொரதாபாத் மாவட்ட ஏஎஸ்பியான அமீத் குமார்ஆனந்த் கூறும்போது, ‘இருபிரிவினர் இடையே மோதலை உருவாக்கி பகையை வளர்க்கும் வகையில் வழக்கறிஞர் அமீருல் ஹசனின் உரை உள்ளது. இதற்கான சாட்சியங்கள் கிடைத்தவுடன் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT