Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி யாருக்கு?: ஆந்திர மாநிலத்தில் காலூன்ற பாஜக தீவிர முயற்சி

திருப்பதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் முன்னாள் மத்திய இணை அமைச்சர் சிந்தா மோகன் நேற்று பிரச்சாரத்தை தொடங்கினார்.

திருப்பதி

நாட்டில் 2 மக்களவைத் தொகுதிகள்மற்றும் 14 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 17-ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதில் திருப்பதி மக்களவைத் தொகுதியும் ஒன்றாகும். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் இத் தொகுதி எம்.பி.யாக இருந்த துர்கா பிரசாத், கரோனா வைரஸ் தொற்றால் மரணம் அடைந்ததை தொடர்ந்து இங்கு இடைத் தேர்தல் நடைபெறுகிறது.

ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி இத்தொகுதிக்கான வேட்பாளரை இன்னும் அறிவிக்கவில்லை. எனினும் எதிர்க்கட்சியான தெலுங்குதேசம் கட்சி, தனது வேட்பாளரை ஏற்கெனவே அறிவித்து விட்டது. முன்னாள் மத்திய இணை அமைச்சர் பனபாக லட்சுமியை அக்கட்சி இங்கு களம் இறக்குகிறது.

திருப்பதி மக்களவை தொகுதிக்கான வேட்பாளரை காங்கிரஸ்கட்சியும் இன்னும் அறிவிக்கவில்லை. என்றாலும் அக்கட்சி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் சிந்தா மோகன் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார்.

இந்நிலையில் ஆந்திராவில் ஜனசேனா கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள பாஜக, திருப்பதியில் தனது வேட்பாளரை களமிறக்க முடிவு செய்தது. ஆனால் ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் இங்கு தனது கட்சி போட்டியிட விரும்புகிறார். இது தொடர்பாக அவர் டெல்லி வரை பேச்சுவார்த்தை நடத்தினார்.

தெலங்கானாவில் துப்பாக்கா சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, பிறகு ஹைதராபாத் மாநகராட்சித் தேர்தலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது.

இதுபோல் ஆன்மீக நகரான திருப்பதியில் வெற்றி பெறுவதன் மூலம் ஆந்திராவில் காலூன்ற அக்கட்சி விரும்புகிறது. எனவே திருப்பதி இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் அக்கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

ஆந்திராவில் நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி மகத்தான வெற்றி பெற்றது. எதிர்கட்சியினர் படுதோல்வி அடைந்தனர். இந்நிலையில் திருப்பதி மக்களவை தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் கட்சியை தோற்கடிக்க வேண்டுமென எதிர்கட்சிகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன.

இதனிடையே இத்தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 23-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 31-ம் தேதி வேட்பு மனு பரிசீலனை நடைபெறும் எனவும், ஏப்ரல் 3-ம் தேதி வரை வேட்பு மனுவை வாபஸ் பெறலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு ஏப்ரல் 17-ல் நடைபெறவுள்ள நிலையில் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x