Published : 16 Mar 2021 07:51 PM
Last Updated : 16 Mar 2021 07:51 PM
திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகள் கம்யூனிஸ்ட் ஆட்சியில் கல்வியிலும், உள்கட்டமைப்பிலும் எந்த வளர்ச்சியும் இல்லை. பாஜக ஆட்சிக்கு வந்தபின்புதான் வளர்ச்சி வேகமடைந்துள்ளது. அதுபோல் கேரளாவிலும் இடதுசாரிகள் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் என்று திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள 140 தொகுதிகளுக்கும் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி ஆட்சியைத் தக்கவைக்கத் தீவிரமாக முயன்று வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி ஆட்சியைக் கைப்பற்றப் போராடி வருகிறது. இரு கட்சிகளுக்கு இடையிலான பிரச்சாரம் தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில் பாஜக சார்பில் பிரச்சாரம் செய்யத் திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் தேப் இன்று வந்திருந்தார். திருவனந்தபுரத்தில் இன்று முதல்வர் பிப்லப் தேப் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
''திரிபுராவில் பாஜக ஆட்சிக்கு வந்தபின்புதான் அங்கு வளர்ச்சி ஏற்பட்டது. அதுபோல் கேரளாவிலும் பாஜக ஆட்சிக்கு வந்தால்தான் வளர்ச்சி ஏற்படும். திரிபுராவில் கடந்த 25 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருந்து என்ன நடந்தது? கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏதும் முன்னேறவில்லை.
கேரளாவில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியும் மாறி மாறி ஆட்சியில் இருந்து வருகின்றன. ஆனால், நாங்கள் பூஜ்ஜியத்திலிருந்து தொடங்குகிறோம். ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்தால், திரிபுராவைவிட வேகமாக கேரளா வளர்ச்சி அடையும்.
மக்கள் தங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி பாஜகவைத் தேர்வு செய்ய வேண்டும். மத்திய அரசின் திட்டங்கள் வேகமாக அமல்படுத்தப்படும்.
திரிபுராவில் மாணிக் சர்க்கார் அரசுக்கு எதிராக நாங்கள் போட்டியிட்டபோது, மக்கள் எங்களைச் சந்தேகப்பட்டார்கள். பூஜ்ஜியத்திலிருந்து தொடங்கி பாஜகவால் மட்டுமே வெல்ல முடியும். இங்கு மட்டும்தான் முடியும். ஏற்கெனவே பாஜக ஒரு இடத்தில் வென்று கணக்கைத் தொடங்கிவிட்டது .
ஆதலால், கேரள மக்கள், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பதிலாக நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசைத் தேர்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது.
பாஜகவின் வெற்றித் திட்டம் கேரளாவில் நிச்சயம் எடுபடும். மக்கள் நரேந்திர மோடியை நம்பி பாஜகவுக்கு வாக்களியுங்கள். உங்களை புதிய வளர்ச்சிக்கு அவரால் எடுத்துச் செல்ல முடியும். கம்யூனிஸ்ட் ஆட்சியில் என்ன உங்களுக்குக் கிடைத்தது?
திரபுரா மக்கள் கம்யூனிஸ்ட் ஆட்சியை அகற்றி பாஜகவுக்கு வாய்ப்பளித்தார்கள். அதுபோல் கேரள மக்களும் கம்யூனிஸ்ட் ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்''.
இவ்வாறு பிப்லப் தேப் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT