Published : 16 Mar 2021 03:45 PM
Last Updated : 16 Mar 2021 03:45 PM
கேரள சட்டப்பேரவைத் தேர்தலிலும் அரசியல் கட்சிகளின் வாரிசுகள் முன்னிறுத்தப்படுவது இந்தத் தேர்தலில் அதிகரித்துள்ளது. ஏறக்குறைய 20க்கும் மேற்பட்ட தலைவர்களின் வாரிசுகள் இந்த முறை களம் காண்கின்றனர்.
காங்கிரஸ் கட்சியில் மட்டும்தான் இந்த வாரிசு அரசியல் அதிகமாக இருக்கும் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படும் சூழலில் இடதுசாரிகள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
ஜனநாயகத்தில் திறமையுள்ள யார் வேண்டுமானாலும் மக்களின் நம்பிக்கையைப் பெற்றால் ஆட்சி அதிகாரத்திற்கு வரலாம். ஆனால், மக்கள் நம்பிக்கையைப் பெறுவதைவிட, கட்சியின் தலைமை அவர்களுக்கு உரிய வாய்ப்பை வழங்க வேண்டியது அவசியம். இன்றுள்ள அரசியல் சூழலில் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைமைகளும் குடும்ப அரசியலால் பின்னப்பட்டுள்ளன.
குடும்ப அரசியல் மூலம்தான் தலைமை உருவாகிறது என்ற எண்ணம், கட்சியின் அனைத்து மட்டங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மாவட்டம், ஒன்றம், வட்டம் என அடிமட்டம் வரை அனைத்துப் பொறுப்புகளிலும் அந்தந்தக் கட்சியின் மூத்த தலைவர்களின் உறவினர்கள், மாமன், மைத்துனர், சகோதர, சகோதரி எனப் பலருக்கும் பதவிக்கான வழிகாட்டப்படுகிறது.
இவ்வாறு உறவுகளைப் பதவிகளில் நியமிப்பது, தேர்தல் வரும்போது, வாரிசுகளைக் களத்தில் இறக்குவதற்கு எளிதான வழியாக மாறிவிடுகிறது. கட்சிக்காகப் பல ஆண்டுகளாக மாடுபோல் உழைத்தேனே, எந்தப் பதவியும் இல்லையே என்ற குமுறல் ஒவ்வொரு தேர்தல் வரும்போதும் தொண்டர்கள் மத்தியிலும், விசுவாசிகள் மத்தியிலும் கேட்பதும் வாடிக்கையாகி வருகிறது.
சில சமயங்களில் கட்சியில் ஒரு கொடிக் கம்பத்தைக் கூட நடாத, கொடி பிடித்துப் போராட்டத்தில் பங்கேற்காத வாரிசுகள் தேர்தலில் நிற்கும் வாய்ப்பைப் பெற்று விடுவதும் நடக்கிறது. அதனால் கட்சிக்குள் ஒருவித இறுக்கமும், தேக்க நிலையும் உருவாகத்தான் செய்கிறது.
தமிழகத்திலும் வாரிசு அரசியல் தாக்கம் ஒவ்வொரு தேர்தலிலும் இருக்கத்தான் செய்கிறது. இந்த சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், ஐ.பெரியசாமியின் மகன் செந்தில், காங்கிரஸ் சார்பில் திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன், காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் என வாரிசு அரசியல் இந்த சட்டப்பேரவைத் தேர்தல் மட்டுமல்லாமல் நாடாளுமன்றத் தேர்தலிலும் வியாபித்துள்ளது.
தமிழகத்துக்கு எந்தவிதத்திலும் நாங்களும் குறைச்சல் இல்லை என்ற ரீதியில் கேரள சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாரிசு அரசியல் இந்தத் தேர்தலில் மேலோங்கி வருகிறது.
காங்கிரஸ் கட்சி
கேரளாவில் வாரிசு அரசியல் பற்றிப் பேசத்தொடங்கிவிட்டாலே காங்கிரஸ் தலைவர் கே.கருணாகரன் பற்றிப் பேசாமல் இருக்க முடியாது. அவரின் மகனும் வடகரா எம்.பி. கே.முரளிதரன், மகளும், கேரள காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் பத்மஜா வேணுகோபால் ஆகியோர் நீமம், திருச்சூர் தொகுதியில் போட்டியிடுகிறார்கள்
கருணாகரனின் தீவிர விசுவாசியும் முன்னாள் தொழிற்சங்கத் தலைவருமான கே.சதிர்கோயாவின் மகன் பி.எம். நியாஸ், பேபூர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
முன்னாள் சபாநாயகர் ஜி.கார்த்திகேயனின் மகன் கே.எஸ்.சபரிநாதன் அருவிக்கரா தொகுதியில் போட்டியிடுகிறார்.
பாலக்காட்டில் உள்ள சித்தூர் தொகுதியில் முன்னாள் எம்எல்ஏ கே.அச்சுதனின் மகன் சுமேஷ் கே.அச்சுதன் போட்டியிடுகிறார்.
இடதுசாரிகள்
கம்யூனிஸ்ட் கட்சியும் தாங்களும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்துள்ளது. பாலக்காடு ஸ்ரீகிருஷ்ணாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ இ.பத்நாபனின் மகனும், மலம்புழா முன்னாள் எம்எல்ஏ எம்.பி. குன்ஹிமாறினின் பேரன் சிபி.பிரமோத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிடுகிறார்.
முன்னாள் எம்எல்ஏ ஆர்.கிருஷ்ணனின் பேரன் எம்.டி.பிரசனன் ஆலத்தூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.
புனலூர் தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே. ஸ்ரீனிவாசனின் மகன் பி.எஸ். சுபால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் போட்டியிடுகிறார். மறைந்த முன்னாள் அமைச்சர் வி.கே.ராஜனின் மகன் வி.ஆர்.சுனில் குமார் கொடுங்கலூர் தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.
மாணி காங்கிரஸ்
கேரள காங்கிரஸ் (மாணி) மகன் ஜோஸ்.கே.மாணி பாலா தொகுதியில் இந்தத் தேர்தலில் போட்டியிடுகிறார். இவரின் தந்தைதான் கே.எம்.மாணி.
முஸ்லிம் லீக் (ஐயுஎம்எல்)
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தலைவரும், முன்னாள் முதல்வருமான சி.ஹெச்.முகமது கோயாவின் மகன் எம்.கே.முனிர், குவாலி தொகுதியில் போட்டியிடுகிறார்.
கலமசேரி தொகுதியில் ஐயுஎம்எல் சார்பில் போட்டியிடும் வி.இ.கபூர், முன்னாள் அமைச்சர் வி.கே.இப்ரஹிம் குஞ்சுவின் மகன் ஆவார்.
இடதுசாரி ஜனநாயக முன்னணியியில் எம்எல்ஏவாக இருந்த விஜயன் பிள்ளையின் மகன் சாவரா சுஜித் விஜயனுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ, மூத்த அமைச்சருமான பேபி ஜானின் மகன், சிபு பேபி ஜான் தேர்தலில் போட்டியிடுகிறார். இரவிபுரம் தொகுதியில் புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.கே.திவாகரனின் மகன் பாபு திவாகரன் போட்டியிடுகிறார்.
எல்எல்பி கட்சி
கல்பேட்டா தொகுதியில் போட்டியிடும் லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவர் எம்.வி. ஸ்ரேயாம்ஸ் குமார், முன்னாள் எம்.பி. வீரேந்திர குமாரின் மகன் ஆவார்.
மறைந்த சோசலிஸ்ட் தலைவர் பி.ஆர். குரூப்பின் மகன் கே.பி.மோகனன் கூத்துப்பரம்பா தொகுதியில் லோக்தந்திரிக் ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடுகிறார்.
கேரளா காங்கிரஸ் (ஜேக்கப்) கட்சி சார்பில் பிரவோம் தொகுதியில் போட்டியிடும் அனூப் ஜேக்கப், கட்சியின் தலைவர் டி.எம்.ஜேக்கப்பின் மகன் ஆவார். கேரள காங்கிரஸ் (பி) கட்சியின் நிறுவனர் ஆர். பாலகிருஷ்ண பிள்ளையின் மகன் கே.பி.கணேஷ் குமார், பத்தனாபுரம் தொகுதியில் போட்டியிடுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT