Published : 16 Mar 2021 12:19 PM
Last Updated : 16 Mar 2021 12:19 PM
காட்டு யானைகள் - மனிதர்கள் இடையே நிகழும் மோதல் சம்பவங்களை தடுக்க , தேனிக்களை பயன்படுத்தும் திட்டம் கர்நாடக வனப் பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.
மிகப் பெரிய யானைகள் கூட்டத்தை, சிறு தேனிக்கள் கூட்டம் விரட்டியடித்து விடும். இதை மிகைப்படுத்துதல் என ஒருவர் கூறலாம். ஆனால், கர்நாடக வனப் பகுதியில், இது உண்மையாக்கப்பட்டுள்ளது.
யானைகள் - மனிதர்கள் இடையேயான மோதல் சம்பவத்தை குறைக்க, தேனீ கூண்டுகளை, வேலியாக பயன்படுத்தும் புதுமையான திட்டத்தை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் தொடங்கியது.
இந்தத் திட்டத்தின் நோக்கம் தேனீக்களை பயன்படுத்தி, யானைகள் மனிதர்கள் இடையேயான தாக்குதல் சம்பவத்தை முறியடிப்பது மற்றும் இதன் மூலம் மனிதர்கள் மற்றும் யானைகளின் உயிர்களை காப்பதுதான்.
இந்த முன்மாதிரி திட்டம், கர்நாடகாவின் குடகு மாவட்டத்தின் செலூர் கிராமத்தில் நான்கு இடங்களில் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தால் தொடங்கப்பட்டது.
இந்த இடங்கள், யானைகள் மனிதர்களை தாக்கும் சம்பவம் நடக்கும் இடங்களான, நாகர்கோல் தேசிய பூங்கா மற்றும் புலிகள் சரணாலயம் பகுதியில் அமைந்துள்ளன. இத்திட்டத்தின் மொத்த செலவே ரூ.15 லட்சம்தான்.
யானை - மனிதர் இடையேயான தாக்குலை குறைக்கும் (RE-HAB (Reducing Elephant – Human Attacks using Bees) என்ற இந்த புதிய திட்டம் காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தேசிய தேன் திட்டத்தின் துணை திட்டமாகும்.
இத்திட்டத்தில், மனிதர்களை யானைகள் தாக்கும் சம்பவங்களை தடுக்க, தேனீ கூண்டுகள் வேலிகளாக பயன்படுத்தப்படுகின்றன.
யானைகள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க, இந்த 4 இடங்கள் ஒவ்வொன்றிலும், 15 முதல் 20 தேனீ கூண்டுகளை காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையம் அமைத்துள்ளது.
இந்த கூண்டுகள் ஒரு கம்பி மூலம் ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. வனப்பகுதியை தாண்டி யானைகள் நுழைந்தால், இந்த கம்பி தேனீ கூண்டுகளை அசைத்து, தேனீக்களை வெளியேற வைக்கும். அந்த தேனீக்கள் யானைகள், மேலும் முன்னேறுவதை தடுத்து யானை கூட்டத்தை விரட்டிவிடும்.
இதற்காக இந்த தேனீ கூண்டுகள் தரையிலும், மரங்களிலும் தொங்க விடப்பட்டுள்ளன. இப்பகுதியில், இந்த செயல்பாடுகளை பதிவு செய்ய முக்கிய இடங்களில் இரவு நேரத்தில் படம் பிடிக்கும் சக்தி வாய்ந்த கேமிராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இது புதுமையான திட்டம், என காதி மற்றும் கிராம தொழில்கள் ஆணையத்தின் தலைவர் சக்சேனா கூறியுள்ளார். தேனீ கூட்டம், யானைகளை எரிச்சலூட்டி மற்றும் அச்சுறுத்தி விரட்டிவிடும் என்பது அறிவியல் பூர்வமாகவும நிருபிக்கப்பட்டுள்ளது என அவர் தெரிவித்தார்.
தேனீக்கள் தங்களின் மென்மையான கண், துதிக்கை மற்றும் காது பகுதிகளில் கொட்டி விடும் என யானைகள் அஞ்சுகின்றன. இதனால் தேனீக்கள் கூட்டம், யானைகளை வலுக்கட்டாயமாக திரும்பிச் செல்ல வைக்கும் என சக்சேனா கூறுகிறார்
இந்தியாவில் யானைகள் தாக்குதலால் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 500 பேர் இறக்கின்றனர். இது புலிகள் தாக்குதலை விட 10 மடங்கு அதிகம்.
2015 முதல் 2020ம் ஆண்டு வரை, சுமார் 2500 பேர் யானைகள் தாக்குதல் மூலம் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 170 பேர் கர்நாடகாவில் மட்டும் இறந்துள்ளனர்.
மனிதர்கள் யானைகளை விரட்டியடிக்கும் சம்பவத்தில், கடந்த 5 ஆண்டுகளில் 500 யானைகளும் இறந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT