Published : 16 Mar 2021 09:19 AM
Last Updated : 16 Mar 2021 09:19 AM
மத்திய ரயில்வே துறைக்கான மானியக் கோரிக்கையில் திமுக எம்.பி.,யான டாக்டர்.எஸ்.செந்தில்குமார் நேற்று மக்களவையில் உரையாற்றினார். இதில் அவர், அனைத்துத் திட்டங்களிலும் மத்திய அரசு தமிழகத்தை புறக்கணித்துவிட்டதாகப் புகார் தெரிவித்தார்.
இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் தருமபுரி தொகுதி எம்.பியான டாக்டர்.எஸ்.செந்தில்குமார் பேசியதாவது:
ரயில்துறையின் வளர்ச்சி, உள்கட்டமைப்பு, ரயில் பாதைகள் மற்றும் இருவழிப் பாதைகள் அமைத்தல், மின்மயமாக்கல் ஆகிய உள்கட்டமைப்பில் மத்திய அரசின் மீது இருந்த அதிக எதிர்பார்ப்பு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
தனியார் மயமாக்குதலை ஊக்குவித்தும், ரயில் கட்டணங்களை உயர்த்தியும் மக்களை மத்திய அரசு சிரமத்திற்கு உள்ளாக்கிவிட்டது. தமிழகத்திற்கு 10 ரயில் பாதைகளுக்கான உத்திரவாதம் மத்திய ரயில்துறையால் வழங்கப்பட்டிருந்தது.
அதில் முக்கியமானது சென்னை- மகாபலிபுரம் - கடலூர், திண்டிவனம் - நகரியை இணைக்கும் விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, திருவள்ளூர், சித்தூர் உள்ளடங்கிய புதிய ரயில் திட்டம் ஆகியன.
திருச்செந்தூர், காரைக்குடி, கூடங்குளம், கன்னியாகுமரி ஆகிய பாதைகளை இணைக்கும் திட்டம்.
இதுபோன்ற பத்து ரயில் பாதைகளுக்கான திட்டங்கள் எந்தவிதமான முன்னேற்றமும் இல்லாமல் முடக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், மத்திய அரசு தமிழகத்தை வஞ்சித்திருப்பதை காட்டுகிறது.
தருமபுரி ரயில் நிலையத்தில் வரும் ரயில்கள் அனைத்தும் நடைமேடை எண் 2 இல் நிற்பதைத் தவிர்த்து நடைமேடை எண் 1 இல் நிறுத்தப்பட வேண்டும். இது முடியாத நிலையில், அதற்கு தானியங்கி படிகள் அமைத்துத் தரவேண்டும்.
பல காலமாக நிலுவையில் உள்ள அதியமான்கோட்டை ரயில் மேம்பாலம் பணிகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
தருமபுரி - மொரப்பூர் இடையே பல ஆண்டுகளாக அமைக்க வேண்டிய ரயில்பாதை இணைப்புத் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றித் தரவேண்டும்.
இக்கோரிக்கைகளை நிறைவேற்ற, ரயில் துறையின் மேலாளர் முதல் மத்திய ரயில் துறை அமைச்சர் வரை சந்தித்தும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இவை, மத்திய அரசு ரயில்துறைக்கான அனைத்து திட்டங்களிலும் தமிழகத்தை புறக்கணிப்பதை காட்டுகிறது.
ரயில்களில் மலம் அல்ல மனிதர்களைப் பயன்படுத்துவது, கட்டணம் உயர்வு, தனியார்மயமாக்கல் போன்றவற்றை திமுக தொடர்ந்து எதிர்க்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT