Published : 08 Nov 2015 12:57 PM
Last Updated : 08 Nov 2015 12:57 PM
பிஹார் சட்டப்பேரவை தேர்தலில் மெகா கூட்டணி வெற்றி பெரும் நிலை தெரிவதால், முதல்வராக பதவியேற்கவுள்ள நிதிஷ் குமாரின் பாட்னா வீட்டின் முன்பு ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தொண்டர்கள் கூடி கொண்டாடி வருகின்றனர்.
மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 122-க்கும் அதிகமாகக் கிடைக்கும் என்பதால், பிஹார் மாநிலத்தின் மூன்றாவது முறையாக முதல் அமைச்சராகிறார் நிதிஷ் குமார்.
இந்த தேர்தலில் லாலு, நிதிஷ் குமார் ஆகியோரின் கட்சியும், காங்கிரஸும் இணைந்து அமைத்த மெகா கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக நிதிஷ் குமார் அறிவிக்கப்பட்டார். இதன் முடிவுகள் இன்று வெளியானதில் மகாகூட்டணிக்கு அதிக தொகுதிகள் கிடைத்து மூன்றாவது முறை முதல் அமைச்சராக நித்திஷ்குமார் பதவி ஏற்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கடந்த அக்டோபரில் துவங்கிய ஐந்து கட்ட தேர்தல் கடைசியாக வியாழக்கிழமை முடிவுற்றது. இதன் பிறகு வெளியான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பிலும் மெகா கூட்டணிக்கே அதிக சாதகமாக வெளியானது. அப்போது தம் கூட்டணிக்கு 190 தொகுதிகள் கிடைக்கும் எனக் கூறிய லாலு, தமது கட்சியை விட நிதிஷின் ஐக்கிய ஜனதா தளத்திற்கு குறைவான வாக்குகள் கிடைப்பினும் அவரே முதல்வராக பதவி வகிப்பார் எனக் கூறி இருந்தார்.
ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் சார்பில் தொடர்ந்து இரண்டாவது முறை பிஹாரின் முதல் அமைச்சர் பதவி வகிக்க இருப்பவர் நிதிஷ் குமார். இது, கடந்த இரண்டு தேர்தல்களிலும் அவர் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் உறுப்பினராக இருந்து போட்டியிட்டதால் கிடைத்ததாகக் கருதப்படுகிறது.
ஆனால், மக்களவை தேர்தலில் தேஜமுயின் பிரதமர் வேட்பாளராக நரேந்தர மோடி முன்னிறுத்தப்பட்டதை எதிர்த்து கூட்டணியில் இருந்து வெளியேறி இருந்தார் நிதிஷ் குமார். பிறகு பிஹாரின் சட்டப்பேரவை தொகுதிகள் சிலவற்றிற்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் தம் அரசியல் விரோதியான லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிட்டார். இதில் கிடைத்த வெற்றி இருவரையும் 2015 சட்டப்பேரவை தேர்தலில் கூட்டு சேர வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT