Published : 15 Mar 2021 06:15 PM
Last Updated : 15 Mar 2021 06:15 PM
ஒருபக்கம் கேரளா சென்ற ராகுல் கடலில் டைவ் அடிக்கிறார். பிரியங்கா அசாம் சென்று தேயிலை தோட்டத்தில் இல்லாத தேயிலையை பறிக்கிறார், எந்த சினிமா படபிடிப்புக்காக இதை செய்கிறீர்கள் என ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கேள்வி எழுப்பியுள்ளார்.
அசாம் மாநிலத்தில் உள்ள 126 தொகுதிகளுக்கும் 3 கட்டங்களாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 27-ம் தேதி முதல் கட்டத் தேர்தலும், ஏப்ரல் 1-ம் தேதியும், 6-ம் தேதியும் அடுத்தடுத்த கட்டத் தேர்தல்கள் நடைபெறுகின்றன.
முதல் கட்டமாக வரும் 27-ம் தேதி 47 தொதிகளுக்குத் தேர்தல் நடக்கிறது. 11 மாவட்டங்களிலிருந்து 42 தொகுதிகளும், நாகோன் மாவட்டத்திலிருந்து 5 தொகுதிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.
இதில் காங்கிரஸ் தலைமையில், அனைத்து இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி, பிபிஎப் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் ஆகியவை இணைந்து கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்திக்கின்றன.
அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் அங்குள்ள நகர்கதியா தொகுதியில் நடந்த பாஜக பொதுக்கூட்டத்தில் ம.பி. முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:
‘‘அசாம் மாநிலத்தின் வளர்ச்சிக்காக மத்திய அரசும், அசாம் அரசும் பல பணிகளை செய்துள்ளது. வட கிழக்கு மாநிலங்களின் நுழைவு வாயிலான அசாம் இன்று வளர்ச்சி பாதையை நோக்கி பயணிக்கிறது. இந்த வெற்றி பயணம் தொடர வேண்டும். அதற்கு மக்கள் மீண்டும் பாஜகவிற்கு வாக்களிக்க வேண்டும்.
ஒருபக்கம் கேரளா சென்ற ராகுல் கடலில் டைவ் அடிக்கிறார். பிரியங்கா அசாம் சென்று தேயிலை தோட்டத்தில் தற்போது சீசன் இல்லாத நிலையில் இல்லாத தேயிலையை பறிக்கிறார். எங்கே போய் நீங்கள் தேயிலை இலையை பறித்தீர்கள். எந்த சினிமா படபிடிப்புக்காக இதை செய்கிறீர்கள்.
மீனவர்களுக்கு தனியாக மத்தியில் துறை உருவாக்க வேண்டும் என ராகுல் காந்தி கோரிக்கை விடுக்கிறார். ஆனால் அந்த துறை அமைக்கப்பட்டு பல காலம் ஆகி விட்டது. இது கூட அவருக்கு தெரியவில்லை. ராகுல் காந்தி டயூப் லைட் ஆக இருக்கிறார். இவ்வளவு காலம் கழித்தும் தெரியவில்லையா’’ எனக் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT